"33 ஆண்டுகள் சினிமா பயணம்.. 'தல' அஜித்குமார் 'நெகிழ்ச்சி' அறிக்கை!
தமிழ்த் திரையுலகின் 'பிளாக்பஸ்டர்' நாயகன் அஜித்குமார், தனது 33 ஆண்டுகால சினிமாப் பயணத்தை முன்னிட்டு, இன்று ஒரு உணர்ச்சிப் பிரவாகம் நிறைந்த அறிக்கையை வெளியிட்டு, ரசிகர்களைப் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார். இந்த அறிக்கையில், அவரது சினிமா மற்றும் மோட்டார் ரேசிங் வாழ்க்கை, பத்ம பூஷண் விருது, குடும்பம், ரசிகர்கள் எனப் பல 'சஸ்பென்ஸ்' விஷயங்களை வெளிப்படையாகப் பேசியுள்ளது, தமிழக அரசியல் மற்றும் சினிமா வட்டாரத்தில் அனல் கிளப்பியுள்ளது.
சினிமாத் துறைக்கு எந்தவித பின்புலமோ அல்லது சிபாரிசோ இல்லாமல், தனது சுய முயற்சியால் மட்டுமே நுழைந்ததாகக் கம்பீரமாகக் குறிப்பிட்டுள்ள அஜித்குமார், காயங்கள், மீண்டு வருதல், தோல்வி மற்றும் அமைதியென வாழ்க்கை என்னைப் பல வழிகளில் சோதித்தது எனத் தனது கடினமான பயணத்தைச் சுருக்கமாக விவரித்துள்ளார். அவரது சினிமாப் பயணத்திற்கு உதவிய அனைத்து இயக்குநர்கள், நடிகர்கள், தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் விமர்சகர்கள் என அத்தனை பேருக்கும் முழுமனதுடன்" நன்றி தெரிவித்துள்ளார்.
மேலும், தனது அறிக்கையில், நான் இன்று என்னவாக இருக்கிறேனோ அதற்கு முக்கிய காரணம் என் ரசிகர்களின் அன்பும் ஆதரவும்தான், என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார். அதே நேரத்தில், உங்கள் அன்பை என் சுயலாபத்திற்காகவோ அல்லது தவறாகவோ பயன்படுத்தமாட்டேன் என்று அதிரடி உறுதிமொழியையும் அளித்துள்ளார்.
மிக முக்கியமாக, இந்திய ஜனாதிபதி மேடம் திரௌபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இந்திய அரசுக்கு, தனக்கு வழங்கப்பட்ட மதிப்புமிக்க பத்ம பூஷண் விருதுக்காக நன்றி தெரிவித்துள்ளார். இந்த விருது, தனது சமூக மரியாதை மற்றும் பொறுப்பை மேலும் பலப்படுத்தியுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
தனது குடும்பத்தின் முக்கியத்துவம் குறித்தும் பேசிய அஜித்குமார், என் வாழ்வின் பலம் என் மனைவி ஷாலினிதான். எல்லா தருணங்களிலும் அவர் என்னுடன் நின்றிருக்கிறார், என்று தனது மனைவியின் ஆதரவுக்கு பெருமிதத்துடன் நன்றி தெரிவித்துள்ளார். தனது குழந்தைகள் அனோஷ்கா மற்றும் ஆத்விக் இருவரும் தனது வாழ்விற்கு அர்த்தம் கொடுத்ததாகவும், தனது பெற்றோருக்கும் நன்றி தெரிவித்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
சினிமாப் பயணத்துடன் தனது பயணம் முடிந்துவிடவில்லையெனக் கூறியுள்ள அவர், மோட்டார் ரேசிங் உலகில் தான் சந்தித்த சவால்கள் பற்றியும், பலமுறை ரத்தம் வரும் அளவுக்கு விபத்துகள் ஏற்பட்ட போதிலும், விடாமுயற்சியுடன் தொடர்ந்து பயணிப்பதாகவும் தைரியமாகக் குறிப்பிட்டுள்ளார். அஜித் குமார் மோட்டார் ரேசிங் என்ற பெயரில் 2025 ஆம் ஆண்டு மீண்டும் விளையாட்டுத் துறைக்குள் நுழைவதாகவும், இது தன்னம்பிக்கை இல்லாதவர்களுக்கு உத்வேகம் கொடுக்கவே என்றும் அவர் பகீர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இறுதியாக, தனது புகழ்பெற்ற தாரக மந்திரமான வாழு, வாழ விடு எனத் தனது அறிக்கையை ஸ்டைலாக முடித்துள்ளார்.