177 முறை குருதி கொடை வழங்கி வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்ற ராணிப்பேட்டை சமூக சேவகர்; அவசரத் தேவைக்கு மட்டுமே ரத்தம் அளிக்கும் மனிதநேயம்!
ராணிப்பேட்டை: ஒவ்வொரு ரத்தத் துளியும் ஒரு புதிய வாழ்வின் தொடக்கம் என்பதை மெய்ப்பித்து, இரட்டை சதத்தை நெருங்கும் ஒரு மனிதநேயப் போராளியின் கதை, தமிழகத்தை உச்சகட்ட நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா பகுதியைச் சேர்ந்த குமரன் ரவிசங்கர் (56), இதுவரை 177 முறை குருதிக் கொடை வழங்கி, தமிழக சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்களிடமிருந்து வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்றுள்ளார்.
அறிவியல் வளர்ச்சியில் மனித ரத்தத்திற்கு மாற்றாக எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. உடலில் ஓடும் உயிர்த்திரவமான ரத்தம், 350 மில்லி மட்டுமே தானமாக எடுக்கப்படுகிறது. ஆனால், ஒருவர் கொடுக்கும் ரத்தத்தின் மூலம் 4 உயிர்களைக் காப்பாற்ற முடியும். ரத்ததானம், உயிரோடு இருக்கும்போதே உறுப்பு தானம் வழங்குவதற்குச் சமமானது என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
1984-ஆம் ஆண்டில், பூவிருந்தவல்லியில் ஒரு கர்ப்பிணிப் பெண்ணுக்காகத் தனது ரத்த தானக் கணக்கைத் தொடங்கிய ரவிசங்கர், தனது தாய் முதலில் மூன்று நாட்கள் வீட்டுக்குள் அனுமதிக்க மறுத்ததை நகைச்சுவையுடன் நினைவுகூர்ந்தார். பின்னர், அவசரத் தேவைக்கு மட்டுமே ரத்த தானம் செய்வதை அறிந்த அவரது குடும்பத்தினர், தொலைபேசியில் வரும் தகவல்களை எழுதி வைத்து உதவியுள்ளனர். இதுவரை அவசரகாலத்திற்கு மட்டுமே அவர் ரத்த தானம் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை ராமச்சந்திரா மருத்துவமனைக்கு மட்டும் 56 முறை ரத்தம் அளித்துள்ளார். மாவட்ட ஆட்சியர்கள் பலரிடமிருந்து பாராட்டுச் சான்றிதழ்களைப் பெற்றுள்ளார். கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில், மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து இரு அலைகளிலும் கிட்டத்தட்ட இருநூறு நாட்கள் உதவி செய்து தமிழக அரசின் சிறப்பு விருதினையும் பெற்றுள்ளார்.
மேலும், தனது இறப்பிற்குப் பிறகு வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு உடல் தானம் செய்யவும் அவர் பதிவு செய்துள்ளார். அவரது குடும்பத்தினரும் கண் தானம், உடல் உறுப்பு தானம் எனப் பல தானங்களைச் செய்துள்ளனர்.
இளைஞர்களுக்கு அழைப்பு விடுத்த அவர், தமிழ்நாட்டில் ஆண்டுக்கு 15 லட்சம் யூனிட் ரத்தம் தேவைப்படுவதாகவும், அதில் 12 லட்சம் யூனிட்டுகள் மட்டுமே கிடைப்பதாகவும் தெரிவித்தார். ரத்த தானம் செய்வதன் மூலம் போதைப் பாதையில் இளைஞர்கள் செல்வதைத் தவிர்த்து, போதையில்லா தமிழகத்தை உருவாக்கலாம் என அவர் வேண்டுகோள் விடுத்தார்.
- மாவட்ட சிறப்புச் செய்தியாளர் ஆர்ஜே.சுரேஷ்