பிற வங்கிகளை மிரட்டும் ஸ்லைஸ்: சேமிப்புக் கணக்கிற்கு அதிரடி வட்டி.. வங்கித்துறையில் புதிய புரட்சி!
ரிசர்வ் வங்கியின் ரெப்போ வட்டிக்கு இணையாக வட்டி விகிதம்; ஜீரோ பேலன்ஸ், தினசரி வட்டி என கவர்ச்சி சலுகைகள்!
சென்னை: வங்கிச் சேவைகளில் ஒரு புதிய புரட்சியை ஏற்படுத்தும் விதமாக, ஸ்லைஸ் ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்க் (Slice Small Finance Bank), தனது வாடிக்கையாளர்களுக்குச் சேமிப்புக் கணக்குகளுக்கு அதிரடியான வட்டி விகிதத்தை அறிவித்துள்ளது. இது, நாட்டின் முன்னணி வங்கிகளை மிரட்டும் அளவுக்கு இருப்பதால், வங்கித் துறையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையின்படி, ஸ்லைஸ் வங்கி தனது சேமிப்புக் கணக்கிற்கு 5.5% வட்டி விகிதத்தை வழங்குகிறது. இது, ரிசர்வ் வங்கியின் ரெப்போ வட்டி விகிதத்திற்கு இணையாக இருப்பதுதான் இதன் சிறப்பு. மேலும், சேமிப்புக் கணக்கைப் பராமரிக்க குறைந்தபட்ச இருப்பு (Minimum Balance) தேவையில்லை என்பதால், இது நடுத்தர மக்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் கடும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
இந்த அசத்தல் திட்டத்தின்படி, சேமிப்புக் கணக்கில் உள்ள தொகைக்கு தினசரி வட்டி வழங்கப்படும். இதனால், வாடிக்கையாளர்களுக்கு உடனடியாகப் பலன் கிடைக்கும். இது, நாட்டின் மிகப்பெரிய வங்கிகளான எஸ்பிஐ, ஹெச்டிஎஃப்சி மற்றும் ஐசிஐசிஐ வங்கிகள் வழங்கும் 2.5% வட்டி விகிதத்தை விட மிக அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல, ஃபிக்ஸட் டெபாசிட்டுகளுக்கு 8.50% வரை வட்டி வழங்கி, மூத்த குடிமக்களையும் 'கவர்ந்துள்ளது.'
கடந்த சில மாதங்களுக்கு முன்பு, ஃபின்டெக் நிறுவனமான ஸ்லைஸ், நார்த் ஈஸ்ட் ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்க் உடன் இணைந்தது. ரிசர்வ் வங்கியின் அனுமதியுடன் நடைபெற்ற இந்த மெர்ஜர் (merger), ஸ்லைஸ் நிறுவனத்தை ஒரு முழுமையான வங்கிச் சேவை நிறுவனமாக மாற்றியது. தற்போது, மாதம் சுமார் 3 லட்சம் புதிய கணக்குகளைத் திறப்பதன் மூலம், ஸ்லைஸ் வங்கி தனது டிஜிட்டல் பயணம் மூலம் வேகமாக வளர்ந்து வருகிறது. அடுத்த ஐந்து ஆண்டுகளில், யுனிவர்சல் பேங்க் ஆக மாறுவதற்கு இலக்கு நிர்ணயித்துள்ளது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.