12வது நாளாக தொடரும் அனல் பறக்கும் போராட்டம்! - தூய்மைப் பணியாளர்களுக்கு ஆதரவு தெரிவித்த முத்தரசன்!
கோரிக்கை நியாயமானது! - அரசு உடனடியாகப் பணியாளர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என முத்தரசன் பேட்டி!
சென்னை: பெருநகர சென்னை மாநகராட்சியின் தலைமை அலுவலகமான ரிப்பன் மாளிகை முன்பு, தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி தூய்மைப் பணியாளர்கள் தொடர்ந்து 12-ஆவது நாளாகப் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். அவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் இன்று நேரில் வருகை தந்து, அவர்களைச் சந்தித்துப் பேசினார்.
போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பணியாளர்களுக்குத் தனது முழு ஆதரவையும் தெரிவித்த இரா.முத்தரசன், பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கை மிகவும் நியாயமானது. இந்தக் கோரிக்கைகளை உடனடியாக தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் எனக் கடுமையாக வலியுறுத்தினார். தனியார்மய ஒப்பந்தங்களை ரத்து செய்து, தங்களை நிரந்தரப் பணியாளர்களாக நியமிக்க வேண்டும் என ஊழியர்கள் தொடர்ந்து கோரி வருவது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து 12 நாட்களாகத் தங்களது கோரிக்கைகளுக்காகத் துவண்டு போகாமல் போராடி வரும் தூய்மைப் பணியாளர்களுக்கு, அரசியல் கட்சிகள் மற்றும் சமூக ஆர்வலர்களின் ஆதரவு பெருகி வருகிறது.