வெளியான அதே நாளில் 'கூலி' திரைப்படம் இணையத்தில் லீக்! - திரை உலகில் அதிர்ச்சி!
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவான கூலி திரைப்படம், திரையரங்கில் வெளியான அன்றே இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டத்தால் படக்குழுவினர் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவான 'கூலி' திரைப்படம் இன்று வெளியாகி, ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. ரஜினியின் ரசிகர்கள் இந்தத் திரைப்படத்தை உற்சாகமாகக் கொண்டாடி வரும் நிலையில், படக்குழுவினருக்கு பெரும் அதிர்ச்சி தரும் செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.
திரையரங்குகளில் படம் வெளியான சில மணி நேரங்களிலேயே, 'கூலி' திரைப்படம் இணையதளத்தில் கசிந்துள்ளது. பிரபல பைரசி இணையதளங்களில் படத்தின் முழுப் பிரதியும் பதிவேற்றப்பட்டுள்ளது. இது படக்குழுவினரையும், தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸையும் கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கும் இந்தத் திரைப்படம், இணையத்தில் வெளியானதால் வசூல் பாதிக்கப்படும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. படத்தின் பிரம்மாண்டமான பட்ஜெட் மற்றும் நீண்டகால உழைப்பு ஆகியவற்றை கருத்தில் கொள்ளும்போது, இந்தச் சட்டவிரோத செயல் படக்குழுவினருக்கு மிகப்பெரிய இழப்பை ஏற்படுத்தும் எனச் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் பலரும், இது போன்ற பைரசி இணையதளங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், மக்கள் திரையரங்குகளில் சென்று படம் பார்க்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர்.