U-20 மகளிர் ஆசிய கோப்பை.. 20 ஆண்டுகளுக்குப் பிறகு தகுதி பெற்ற இந்திய அணி!
U-20 மகளிர் ஆசிய கோப்பை கால்பந்து தொடருக்கு 20 ஆண்டுகளுக்குப் பிறகு மியான்மருக்கு எதிரானப் போட்டியில் 1-0 என வெற்றி பெற்று பிறகு இந்திய அணி தகுதி பெற்றுள்ளது
கால்பந்து உலகில் இந்திய மகளிர் அணி வரலாறு படைத்துள்ளது. 20 ஆண்டுகளுக்குப் பிறகு, முதல் முறையாக U-20 மகளிர் ஆசிய கோப்பை கால்பந்து தொடருக்கு இந்திய அணி தகுதி பெற்றுள்ளது. மியான்மருக்கு எதிரான தகுதிச்சுற்றுப் போட்டியில் 1-0 என்ற கோல் கணக்கில் அதிரடி வெற்றி பெற்று இந்திய இளம் வீராங்கனைகள் இந்தச் சாதனையைப் படைத்துள்ளனர்.
மியான்மரில் உள்ள துவுன்னா மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில், இந்தியாவின் வீராங்கனை பூஜா 27-வது நிமிடத்தில் தலையால் முட்டிக் கோல் அடித்து அணியை "முன்னிலைக்கு" கொண்டு சென்றார். அதன் பின்னர், கோல் எதுவும் அடிக்கப்படவில்லை. மியான்மர் அணி இரண்டாவது பாதியில் கடும் நெருக்கடி கொடுத்தும், இந்தியாவின் பாதுகாப்பு அரண் மிகவும் வலிமையாக இருந்ததால் கோல் எதுவும் அடிக்க முடியவில்லை. போட்டியின் இறுதிக் கணங்கள்வரை பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் இருந்த நிலையில், இந்தியாவின் வெற்றி உறுதி செய்யப்பட்டது.
இந்த வெற்றிமூலம், 2026-ஆம் ஆண்டு தாய்லாந்தில் நடைபெறவுள்ள U-20 மகளிர் ஆசிய கோப்பைத் தொடருக்கு இந்திய அணி தகுதி பெற்றுள்ளது. 2006-ஆம் ஆண்டிற்குப் பிறகு இப்போதுதான் இந்தச் சாதனையை இந்திய அணி நிகழ்த்தியுள்ளது. இந்தியாவின் இந்த வரலாற்று வெற்றியானது, நாடு முழுவதும் கால்பந்து ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.