கோவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் சுற்றுப்பயணம்! தலைவர்கள் சிலைகளைத் திறந்து வைக்கிறார்!
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கடந்த முறை உடல்நலக்குறைவால் ஒத்திவைக்கப்பட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக, இரண்டு நாள் சுற்றுப்பயணமாகக் கோவை வந்துள்ளார். கோவை, திருப்பூர் மாவட்டங்களில் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளைத் தொடங்கி வைப்பதுடன், சிலைகளையும் திறந்து வைக்க உள்ளார். முதலமைச்சரின் வருகை மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இன்று மாலை கோவை விமான நிலையம் வந்த முதலமைச்சருக்கு, கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட திமுக நிர்வாகிகள் அதிரடியான வரவேற்பு அளித்தனர். அதைத் தொடர்ந்து, அவர் திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டைக்கு புறப்பட்டுச் சென்றார். அங்கு இரவு 8.50 மணிக்கு முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் சிலையைத் திறந்து வைக்கிறார். பின்னர், இரவில் உடுமலைப்பேட்டையில் தங்கி ஓய்வெடுக்கிறார்.
நாளை, திங்கட்கிழமை காலை 10 மணிக்கு உடுமலை நேதாஜி மைதானத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில், முதலமைச்சர் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கிப் பேசுகிறார். அதன் பின்னர், பகல் 12 மணிக்குப் பொள்ளாச்சி செல்லும் அவர், அங்குக் காமராஜர், வி.கே.பழனிச்சாமி, கவுண்டர் சுப்பிரமணியம், பொள்ளாச்சி மகாலிங்கம் ஆகியோரின் உருவச் சிலைகளைத் திறந்து வைக்கிறார்.
அத்துடன், பரம்பிக்குளம் ஆழியாறு அணை கட்டுமானப் பணியின்போது உயிரிழந்த தொழிலாளர்களின் நினைவாகக் கட்டப்பட்ட நினைவரங்கம், மற்றும் வி.கே.பழனிச்சாமி அரங்கம் ஆகியவற்றையும் அவர் திறந்து வைக்க உள்ளார். இந்த நிகழ்ச்சிகளுக்குப் பிறகு, கோவைக்குக் காரில் திரும்பி, விமானம்மூலம் சென்னைக்குப் புறப்பட்டுச் செல்கிறார். முதலமைச்சரின் வருகையையொட்டி கோவை மற்றும் பொள்ளாச்சிப் பகுதிகளில் 1,300 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.