Air India: ஏர் இந்தியா அதிரடி: ஏர் இந்தியாவில் ஓய்வு வயது உயர்வு: விமானிகளுக்கு 65 வயது!
ஏர் இந்தியா விமான நிறுவனம், தனது ஊழியர்களுக்கான ஓய்வு பெறும் வயதை அதிரடியாக உயர்த்தி அறிவித்துள்ளது.
ஏர் இந்தியாவின் இந்த முடிவின்படி, விமானிகளின் ஓய்வு வயது 58-லிருந்து 65 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மற்ற ஊழியர்களின் ஓய்வு வயதும் 58-லிருந்து 60 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
விஸ்தாரா நிறுவனம் ஏர் இந்தியாவுடன் இணைந்த பிறகு, ஊழியர்களிடையே நிலவிய ஓய்வு வயது தொடர்பான குழப்பங்களைச் சரிசெய்யும் விதமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அனுபவமிக்க விமானிகள் மற்றும் ஊழியர்களைத் தக்கவைத்துக்கொள்ளும் நோக்கில், இந்த முக்கிய முடிவை நிர்வாகம் எடுத்துள்ளது.
இந்த அறிவிப்பு, சுமார் 24,000 ஊழியர்களுக்கு, குறிப்பாக 3,600 விமானிகளுக்கு, பெரும் நிம்மதியையும் மகிழ்ச்சியையும் அளித்துள்ளது. இதுகுறித்து ஏர் இந்தியாவின் தலைமைச் செயல் அதிகாரியும், நிர்வாக இயக்குநருமான கேம்ப்பெல் வில்சன், ஊழியர்களுடனான ஒரு கூட்டத்தில் அறிவித்ததாகக் கூறப்படுகிறது.
இந்திய விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (DGCA), வணிக விமானிகள் 65 வயது வரை விமானங்களை இயக்கலாமென அனுமதி அளித்துள்ள நிலையில், ஏர் இந்தியாவின் இந்த முடிவு, விமானப் போக்குவரத்துத் துறையில் ஒரு புதிய மைல்கல்லாகக் கருதப்படுகிறது.