அஜித்குமார் வழக்கு: “சாரி வேண்டாம், நீதி வேண்டும்” – தவெக தலைவர் விஜய் முழக்கம்!
சென்னை சிவானந்தா சாலையில், மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் கொலை சம்பவத்துக்கு எதிராகவும், மேலும், தமிழகம் முழுவதும் காவல் நிலையங்களில் விசாரணையின்போது உயிரிழந்தவர்களுக்கும் நீதி கேட்டுத் தவெக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்தில் கோவில் நகை ஒன்று காணாமல் போனதாக விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட காவலாளி அஜித்குமார் தனிப்படை போலீசாரால் அடித்துக் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கு சம்பவத்தில் உடனடியாகக் காவலர்கள் பணியிட நீக்கம் செய்யப்பட்ட நிலையில் அவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். ஆனால், அவர்கள்மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருப்பது அவர்களைக் காப்பாற்றும் நோக்கத்துடன் உள்ளதாகக் கூறி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் கடந்த ஜூலை 3 ஆம் தேதி காலை 10 மணி அளவில் எழும்பூர் ராஜரத்தின மைதானம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளதாகக் கூறப்பட்டது.
போராட்டத்திற்கு அனுமதி கேட்டுச் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் த.வெ.க. சார்பில் மனு முறைப்படி கொடுக்கப்பட்ட நிலையில், மனுவைப் பரிசீலித்த போலீசார் எழும்பூரில் நடைபெற இருந்த போராட்டத்திற்கு அனுமதி மறுத்தனர். இந்நிலையில், நீதிமன்றம் தவெக ஆர்ப்பாட்டத்திற்கு வழங்கிய நிலையில், சென்னை காவல்துறையும் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் அனுமதி வழங்கியது.
இந்த் ஆர்ப்பாட்டத்தில், தமிழக அரசுக்கு எதிராக “சாரி வேண்டாம்... நீதி வேண்டும்.” என முழக்கங்கள் எழுப்பப்பட்டது. மேலும் தமிழ்நாட்டில் இந்த லாக்-அப் மரணங்களால் உயிரிழந்தவர்களின் குடும்பங்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.
அதன்படி, அரசியல் கட்சி தொடங்கிய பிறகு முதன்முறையாகப் போராட்ட களத்திற்கு வந்த தவெக தலைவர் விஜய் கருப்பு நிற உடை அணிந்து, பதாகையை ஏந்தி போராட்டத்தில் பங்கேற்றார். அப்போது பேசிய அவர், அஜித்குமார், சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த இளைஞர்: இளைஞர்; அந்தக் குடும்பத்துக்கு நேர்ந்த கொடுமைக்கு, CM சார்... நீங்க Sorry சொன்னீங்க. தப்பில்ல. ஆனா இதே ஆட்சியில 24 இளைஞர்கள் இதேபோல இறந்திருக்காங்க, அவங்க குடும்பத்துக்கும் சாரி சொல்லுங்க என்றும், இளைஞர் அஜித்குமார் குடும்பத்துக்குக் கொடுத்த நிவாரணம் போல, எல்லா குடும்பங்களுக்கும் நிவாரணம் கொடுங்க என்றும் தவெக தலைவர் விஜய் கோரிக்கை விடுத்தார்.
சாத்தான் குளம் கொலை அவமானம் என்றால் அஜித் கொலை அவமானம் இல்லையா எனக் கேள்வி எழுப்பிய விஜய், தவெகவுக்கு அஞ்சி ஆர்.எஸ்.எஸ்., பாஜக, பின்னால் திமுக ஒளிந்து கொண்டிருப்பதாகவும் விமர்சித்தார்.
அண்ணா பல்கலை மாணவி வழக்கு முதல் அஜித்குமார் வழக்குவரை எல்லாவற்றுக்கும் நீதிமன்றம் தலையிட்டுக் கேள்வி கேட்கிறது. அனைத்திலும் நீதிமன்றம் தலையிட்டுக் கேள்விகேட்க வேண்டும் என்றால், நீங்க எதுக்கு சார்? உங்க ஆட்சி எதுக்கு சார்? முதல்வர் பதவி எதுக்கு சார்? என்று கேள்வி எழுப்பி விமர்சனம் செய்தார்.
அதிகபட்சம் உங்களிடமிருந்து வரும் பதில், 'சாரி மா, நடக்கக்கூடாதது நடந்துடுச்சு மா' என்பதுதானே. இந்த வெற்று விளம்பர மாடல் திமுக சர்கார், இப்போ ‘சாரி மா’ மாடல் சர்காரா மாறிவிட்டது. இந்த ஆட்சியை விட்டு இந்த அரசு வெளியேறுவதற்கு முன் நீங்கள் செய்த எல்லா தவறுக்கும் பரிகாரமாகச் சட்ட ஒழுங்கைச் சரி செய்தே ஆக வேண்டும்.
இல்லையென்றால் மக்களோடு மக்களாக ஒன்றாக நின்று உங்களைச் சரி செய்ய வைப்போம். தமிழக வெற்றிக் கழகம் சார்பில் அதற்கான அத்தனை போராட்டங்களும் எடுத்து நடத்தப்படும்'' என்று அவர் கூறினார்.