திருமலா பால் மேலாளர் தற்கொலை: துணை ஆணையர் மீது துறை ரீதியான நடவடிக்கை - சென்னை காவல் ஆணையர் விளக்கம்
திருமலா பால் மேலாளர் தற்கொலை வழக்கில், விதிகளை மீறித் துணை ஆணையர் செயல்பட்டதாலே துறை ரீதியான நடவடிக்கை எடுத்துள்ளோம் எனச் சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் தெரிவித்துள்ளார்.
திருமலா பால் நிறுவன மேலாளர் நவீன் மரணம் தொடர்பான விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள நிலையில் இது தொடர்பாகச் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர்,
திருமலா நிறுவன மேலாளர் நவீன் மரணம் தொடர்பாக இதுவரை நடத்திய விசாரணையில் அறிவியல்பூர்வமாக தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளதாகவும், இவ்வழக்கு தொடர்பாகக் காவல் துணை ஆணையர் பாண்டியராஜன் நேரில் அழைத்து விசாரணை நடத்தியதாக ஒரு தகவலும் இல்லை எனவும் தெரிவித்தார்.
என்னுடைய அனுமதியின் பேரிலேயே அனைத்து வழக்குகளையும் விசாரணை செய்ய வேண்டும் எனத் தெரிவித்தேன், பின்னர் நடைமுறை சிக்கல் காரணமாக இணை ஆணையர் உத்தரவின் பேரிலேயே வழக்கு விசாரணை செய்யப்படுவதாகவும், திருமலா நிறுவன புகாரில் 40 கோடி எனக் குறிப்பிட்டும் துணை ஆணையர் விசாரணை செய்ததால் அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
தற்கொலை செய்யும்போது அவர்களே தப்பிக்கக் கூடாது என கைகளைக் கயிறு மூலமாகக் கட்டுவது வழக்கம் என அறிவியல் பூர்வமாகத் தெரியவந்துள்ளது. கடந்த ஜூன் 25ஆம் தேதி குறைதீர் முகாம் மூலமாக எனக்கு வந்த புகாரை, புகார் சரியானவை தானே என்ற நிலையிலே இருந்ததாகவும், மேலாளர் நவீனை அழைத்து விசாரிக்கவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.
சிசிபியில் புகார் கொடுத்த உடனே எப்.ஐ.ஆர் போடமாட்டோம் எனவும் முகாந்திரம் இருந்தால் மட்டுமே நடவடிக்கை எடுப்போம் எனவும் தற்கொலைக்குத் தூண்டியதாக வழக்குபதிவு செய்வது குறித்து விசாரணை நடத்தப்படும் என அவர் தெரிவித்தார்.
மோசடி பணத்தில் வாங்கிய நிலத்தை விற்று பணம் தருவதாக மேலாளர் நவீன் தெரிவித்த போதும், பிரஷர் கொடுத்ததால் அதே இடத்தில் தற்கொலை செய்து கொண்டுள்ளார். நவீன் தான் அந்த வழக்கில் குற்றவாளி, அவரே இறந்துவிட்டார். யாரை விசாரிக்கிறது எனவும் எந்தவொரு வழக்கிலும், குற்றச்சாட்டப்பட்டவர் இறந்துவிட்டால் விசாரிக்க முடியாது எனக் காவல் ஆணையர் அருண் தெரிவித்தார்.
ஏழு கிணறு பகுதியில் காயங்களுடன் இறந்து கிடந்த நபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனை அறிக்கையில் கொலை என்பது தெரியவந்தது, சிசிடிவி காட்சிகளின் பதிவான காரை வைத்து ஜனசேனா கட்சியைச் சேர்ந்த 5 பேரைக் கைது செய்துள்ளோம், ஜனசேனா கட்சியில் முன்னதாக வேட்பாளராக நின்ற நபருக்கு இந்த முறை வாய்ப்பு கிடைக்காமல் கூட்டணி கட்சிக்குச் சென்றுவிட்டதாகவும், எதிர்கட்சிக்கு ஆதரவாகச் செயல்பட்ட நபரை ஆந்திராவில் கொலை செய்துவிட்டு இங்கு வீசிவிட்டு சென்றிருப்பதாகவும் அவர் தெரிவித்தார். சிகிச்சைக்காக அடிக்கடி வந்ததால் ரூட் தெரிந்து வந்துள்ளனர்.
நுங்கம்பாக்கம் பார் தகராறு போதை பொருள்வரை சென்றதாகவும், அதன் பிறகு 10 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 27 நபர்கள் கைது செய்யப்பட்டு 6 பேரைக் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார். பப்களில் போதை பொருள் பயன்படுத்துவது தொடர்பாகத் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம், பப்புகளில் போதை பொருள் பயன்படுத்துவது பெருமளவு குறைந்துள்ளதாகவும், பிரைவெட் இடங்களில் பயன்படுத்து கிறார்கள், 84 நெட்வொர்க்கை கண்டுபிடித்து நடவடிக்கை எடுத்து வருகிறோம் என அவர் தெரிவித்தார்.
போதை பொருள் விற்பனை மூலமாகச் சம்பாதித்த சொத்துகள் முடக்கப்படும் எனவும் இளைஞர்கள் போதை பொருள் பயன்படுத்துவது தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்தி வருவதாகவும் அவர் தெரிவித்தார். த.வெ.க போராட்டத்திற்கு யார் அனுமதி மறுத்ததாகவும், இதுவரை நாங்கள் மறுத்ததே இல்லை எனவும் இந்த முறை கேட்டுள்ளார்கள் அனுமதி கொடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். அவர்களே காவல்துறை அனுமதி கொடுக்கவில்லையென நினைத்து நீதிமன்றம் செல்வதாகவும் அவர் தெரிவித்தார்.
துணை ஆணையருக்கு விடுமுறை கொடுத்ததும் நான் தான் எனவும் அவர் இந்த முறைகேடு புகாருக்கு முன்னதாகவே விடுமுறை எடுத்துவிட்டார் எனவும் அவர் தெரிவித்தார். தற்கொலைக்குத் தூண்டப்பட்டதாக இதுவரை யாரும் புகார் வரவில்லை, தற்கொலை கடிதம் மூலமாக எடுத்து விசாரிப்போம் எனவும் தெரிவித்தார்.