சேலம்:
போக்குவரத்து காவலர்களுக்கு வெயிலின் தாக்கத்திலிருந்து பாதுகாக்கும் வகையில் சோலார் தொப்பி மற்றும் மோர் குளிர்பானம் வழங்கும் பணியை சேலம் மாநகர காவல் ஆணையாளர் துவக்கிவைத்தார்…
தமிழகத்தில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே வெயிலின் தாக்கம் அதிகளவில் அதிகரித்து காணப்படுகிறது. இந்தநிலையில் மாநகர பகுதிகளில் பணியாற்றும் போக்குவரத்து காவலர்கள் வெயிலின் தாக்கத்திலிருந்து பாதுகாக்க சோலார் கேப் மற்றும் மோர் வழங்கும் நிகழ்ச்சி சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நடைபெற்றது.
இதில் சேலம் மாநகர காவல் ஆணையாளர் நஜ்முல் ஹோடா கலந்துகொண்டு போக்குவரத்து காவலர்களுக்கு தொப்பியை அணிவித்து மோர் மற்றும் குளிர்பானங்களை வழங்கினார். தொடர்ந்து காவலர்களிடம் வெயிலின் தாக்கம் இருந்தாலும் போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் கண்காணிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இந்த நிகழ்ச்சியில் துணை ஆணையாளர் மோகன்ராஜ், உதவி கமிஷனர் வெங்கடேஷ் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.