கேட்டீங்களா.. அப்படியே பாஜக பிளான்தான்.. "பொம்மை முதல்வர்"..திமுக அரசு மீது பாயும் எடப்பாடி பழனிசாமி.,

சென்னை:

மத்திய அரசு அறிவித்தபடி ஒரே நாடு ஒரே தேர்தல் மூலம் 2024ம் ஆண்டு திமுக ஆட்சி முடியும் என்று சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.. சோதனை என்ற பெயரில் காவல்துறை மூலம் பொய் வழக்குப் போட்டு அவதூறு பரப்பி வரும் திமுகவிற்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என்றும் எடப்பாடி பழனிச்சாமி காட்டமாக கூறியுள்ளார். தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். அந்த வகையில், சேலம் மாநகர் மாவட்டம், புறநகர் மாவட்டம் அதிமுக சார்பிலும் திமுக அரசை கண்டித்து சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகில் உள்ள நாட்டாண்மை கட்டடம் முன்பு நடந்தது..

 

எடப்பாடி பழனிசாமி

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்கி சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியபோது, “திமுக ஆட்சி பொறுப்பேற்று 7 மாதங்களாகிறது.. தேர்தல் வாக்குறுதிகளாக 500க்கும் மேற்பட்ட வாக்குறுதிகள் அறிவிக்கப்பட்டு ஒருசில வாக்குறுதிகள் மட்டுமே நிறைவேற்றப்பட்டுள்ளது.

 

 

முக்கிய வாக்குறுதி

முக்கிய வாக்குறுதிகளாக அறிவிக்கப்பட்ட தேசிய மயமாக்கப்பட்ட வங்கி கூட்டுறவு வங்கிகளில் நகை கடன் தள்ளுபடி, இல்லத்தரசிகளுக்கு ஆயிரம் ரூபாய், முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை, சுய உதவி குழுக்களுக்கு தேசிய வங்கிகளில் கடன் தள்ளுபடி போன்ற எந்த வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படாமல் உள்ளது.. மக்களின் பிரதான தேர்தல் அறிக்கையாக பெட்ரோல் டீசல் விலை குறைக்கப்படும் என்று தேர்தல் வாக்குறுதிகளை அளித்து விட்டு “விடியும் அரசு” என கோரி தமிழக மக்களை வஞ்சித்து விடியாத அரசாக செயல்பட்டு வருகிறது.

 

சிமெண்ட் விலை

வாக்குகளை வாங்குவதற்காக கவர்ச்சிகரமான தேர்தல் அறிக்கை அளித்து விட்டு ஏமாற்றும் அரசாக செயல்பட்டு வருகிறது. கட்டுமான தொழிலில் பல லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.. சிமெண்ட் விலையை உயர்த்திய திமுக அரசு அதனை குறைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.. ஏழை எளிய மக்களுக்காக அதிமுக அரசில் துவங்கப்பட்ட அம்மா உணவகத்தை மூடும் நோக்கில் செயல்பட்டு வரும் திமுக அரசு கண்டிக்கத்தக்கது.. அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி கொடுக்காமல் ஏமாற்றி வரும் அரசாகவும் திகழ்ந்து வருகிறது..

 

பொம்மை முதலமைச்சர்

தற்போது செயல்பட்டு வரும் முதலமைச்சர் பொம்மை முதலமைச்சராக இருக்கிறார். வேண்டுமென்றே முன்னாள் அமைச்சர்கள் மற்றும் அதிமுகவினர் மீது லஞ்ச ஒழிப்பு காவல் துறையை ஏவிவிட்டு பொய் வழக்குகளை போட்டு மக்களை திசை திருப்பும் நோக்கில் செயல்பட்டு வரும் திமுக அரசுக்கு எவ்வளவு அவதூறு பரப்பினால் சட்டப்படி எதிர்கொள்வோம்.. மத்திய அரசு அறிவித்துள்ள ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற முறையில் வருகின்ற 2024 ஆம் ஆண்டு திமுக ஆட்சி முடிவுக்கு வரும்” என்றார் எடப்பாடி பழனிசாமி.

 

முடிவு

ஒரே நாடு ஒரே மொழி, ஒரே தேர்தல் என்பது மத்திய அரசின் புது கொள்கையாக இருக்கிறது.. ஒரே நேரத்தில் பாராளுமன்றத்திற்கும் அனைத்து மாநில சட்டமன்றத் தேர்தல் நடத்த வேண்டும் என்றும் இதனால் கோடிக்கணக்கான பணம் மிச்சமாகும் என்றும் மத்திய அரசு தெரிவித்து வருகிறது… ஆனால், ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்திற்கு பல்வேறு மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் அதிமுக தன்னுடைய ஆதரவை தெரிவித்தது..

 

கூட்டணி

இப்போதும் பாஜகவின் அதே கொள்கையை அதிமுக முன்னெடுத்துள்ளது.. அப்படியானால், 2024 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் வரும் வரும்போது தமிழகம் உள்பட அனைத்து மாநிலங்களுக்கும் ஒரே நேரத்தில் சட்டமன்ற தேர்தல் வருமா என்று தெரியவில்லை.. ஆனால், பாஜகவின் கூட்டணியில் அதிமுக நெருங்கி உள்ளது என்பது மட்டும் எடப்பாடி பழனிசாமியின் பேச்சில் தெரியவருகிறது.

Previous Post Next Post

Post Ads 1

Post Ads 2

Travel with us!

News Editor's/Reporter's can join with our Desk Team. Publish your news now on 24×7. Reachout with your contact through editor@ipdtamil.com