விஜய்யின் தவெக-விற்கு விசில் சின்னம்: 234 தொகுதிகளிலும் அதிரடியாக ஊதத் தயார்!
டெல்லியிலிருந்து கிடைத்த கிரீன் சிக்னல் - முதல் தேர்தலிலேயே பொதுச் சின்னத்துடன் களமிறங்கும் தளபதி!
புதுடெல்லி: தமிழக அரசியல் களத்தில் மெகா எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்திற்கு (தவெக), 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான பொதுச் சின்னமாக விசில் சின்னத்தை இந்தியத் தேர்தல் ஆணையம் இன்று அதிகாரப்பூர்வமாக ஒதுக்கியுள்ளது. ‘ஜனநாயகன்’ படப் பிரச்சனை, சிபிஐ விசாரணை எனப் பல்வேறு முனைகளில் நெருக்கடிகளைச் சந்தித்து வந்த விஜய்க்கு, இந்தச் சின்னம் ஒதுக்கீடு ஒரு மிகப்பெரிய 'பூஸ்ட்' ஆகவும், தொண்டர்களுக்கு உற்சாக மருந்தாகவும் அமைந்துள்ளது.
தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் ஒரே சின்னத்தில் போட்டியிட அனுமதி கோரி, தவெக சார்பில் தேர்தல் ஆணையத்திடம் விண்ணப்பிக்கப்பட்டிருந்தது. விசில், கால்பந்து, வெற்றிக் கோப்பை உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட சின்னங்களைப் பட்டியலிட்டு வழங்கிய நிலையில், விஜய் தரப்பு விரும்பி கேட்ட 'விசில்' சின்னத்தையே தேர்தல் ஆணையம் தற்போது 'லாக்' செய்துள்ளது. தவெக இன்னும் அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக மாறாவிட்டாலும், தேர்தல் ஆணையத்தின் விதிமுறைப்படி முறையாகக் கணக்குகளைத் தாக்கல் செய்திருந்ததால், அவர்களுக்கு இந்தப் பொதுச் சின்னம் வழங்கப்பட்டுள்ளது.
இந்தச் சின்னம் ஒதுக்கீடு குறித்து டெல்லியிலிருந்து வெளியான அறிவிப்பால், தவெக தொண்டர்கள் 'குஷியில்' ஆழ்ந்துள்ளனர். "இனி 234 தொகுதிகளிலும் வெற்றி விசில் சத்தம் கேட்கும்" எனச் சமூக வலைத்தளங்களில் ஹேஷ்டேக் போட்டுத் தவெகவினர் டிரெண்ட் செய்து வருகின்றனர். இந்தச் சின்னம் ஒதுக்கீடு 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு மட்டுமே பொருந்தும் எனவும், தவெக போட்டியிடாத இடங்களில் இந்தச் சின்னம் சுயேச்சை வேட்பாளர்களுக்கு வழங்கப்படலாம் எனவும் தேர்தல் ஆணையம் தெளிவுபடுத்தியுள்ளது. நான்கு முனைப் போட்டி உறுதியாகியுள்ள நிலையில், விஜய்யின் விசில் சின்னம் கிராமப்புற வாக்காளர்களிடையே எளிதில் சென்றடையும் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
சின்னம் கிடைத்துவிட்ட மகிழ்ச்சியில் தேர்தல் பணிகளைத் தவெக ஃபுல் ஸ்விங்கில் முடுக்கிவிட்டுள்ளது. சின்னத்தை மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் டிஜிட்டல் மற்றும் போஸ்டர் பிரசாரங்கள் இப்போதே தயாராகி வருகின்றன. அதே நேரத்தில், கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யத்திற்கு மீண்டும் 'பேட்டரி டார்ச்' சின்னமே ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால், வரும் தேர்தலில் சின்னங்களை மையமாக வைத்தும் ஒரு சுவாரசியமான 'கேம்' நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
