வைகோவின் தியாகத்தைக் கொச்சைப்படுத்தாதீர்கள்! - அண்ணாமலை, நயினார் நாகேந்திரனுக்கு துரை வைகோ கடும் எச்சரிக்கை!
“ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் எதைப்பற்றி வேண்டுமானாலும் பேசலாம்; ஆனால், கூட்டணியில் பங்கு, ஆட்சியில் பங்கு என்பதில் எங்களுக்கு உடன்பாடில்லை” என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மதுரையில் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, ‘சமத்துவ நடைபயணம்’ மேற்கொண்டு வரும் வைகோ, இன்று மதுரையின் உத்தங்குடி பகுதியில் தனது பயணத்தின் ஒரு பகுதியை நிறைவு செய்தார். அவருக்குத் தொண்டர்கள் கரகாட்டம், மயிலாட்டம் மற்றும் மேளதாளங்களுடன் எழுச்சிமிகு வரவேற்பு அளித்தனர். இந்தப் பயணத்தின் போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுக கூட்டணியின் பலம், பாஜகவின் தந்திரங்கள் மற்றும் ஆட்சியில் பங்கு குறித்த விவகாரங்களில் தனது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தினார்.
செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, "அரசியலுக்கு வர அனைவருக்கும் உரிமை உண்டு; ஆனால் இங்கு எளிதில் சாதித்துவிடலாம் என நினைப்பவர்கள் மணல்கோட்டை கட்டுகிறார்கள், அது எப்போது வேண்டுமானாலும் சரிந்து விழும்" என்றார். திமுக கூட்டணி குறித்துப் பேசிய அவர், "வருகிற தேர்தலில் திமுக மகத்தான வெற்றி பெற்று மு.க.ஸ்டாலின் மீண்டும் முதலமைச்சராகத் திராவிட மாடல் ஆட்சியை வழிநடத்துவார். சித்தாந்த அடிப்படையில் நாங்கள் திமுகவுடன் இணைந்துள்ளோம். மந்திரி சபையில் இடம் வேண்டும் என நானோ, என் கட்சியினரோ ஒருபோதும் கேட்டதில்லை; அந்த நிபந்தனைகளில் எங்களுக்கு உடன்பாடும் இல்லை" என அதிரடியாகத் தெரிவித்தார். 'ஜனநாயகன்' திரைப்படத் தணிக்கைச் சிக்கல் குறித்துக் கேட்டபோது, "படத்தை வெளியிடுவதற்கு எல்லா உரிமையும் உள்ளது; எனக்குத் தெரிந்ததெல்லாம் கலைஞர் எழுதிய 'பராசக்தி' தான், இப்போது வந்துள்ள 'பராசக்தி' பற்றித் தெரியாது" எனத் தனது பாணியில் பதிலளித்தார்.
இதனைத் தொடர்ந்து வைகோவின் மகனும் எம்.பி.யுமான துரை வைகோ பேசுகையில், உணர்ச்சிவசப்பட்டுத் தனது தந்தையின் தியாகங்களைப் பட்டியலிட்டார். "82 வயதில், இதயமே இயந்திரம் மூலம் இயங்கும் நிலையிலும், மருத்துவர்களின் எச்சரிக்கையை மீறித் தமிழர்களுக்காக வைகோ இந்த நடைபயணத்தை மேற்கொண்டுள்ளார். அவரது தொண்டு மற்றும் தியாக வாழ்க்கையைச் சமூக வலைதளங்களில் கொச்சைப்படுத்துவதை பாஜகவினர் நிறுத்திக்கொள்ள வேண்டும். நயினார் நாகேந்திரன், அண்ணாமலை போன்றவர்கள் அரசியல் வன்மத்தை வைகோ மீது விதைப்பது ஏற்புடையதல்ல" என ஆவேசமாக எச்சரிக்கை விடுத்தார். துரை வைகோ நெகிழ்ந்து பேசியபோது, அருகில் இருந்த வைகோ மனம் உருகிக் கண் கலங்கியது அங்கிருந்த தொண்டர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. பிரதமர் மோடி திருக்குறளை இந்தியில் வாசித்துத் தமிழர்களைக் கவர நினைப்பதாகவும், ஆனால் தமிழகத்திற்கான நிதி ஒதுக்கீட்டில் வஞ்சகம் செய்வதாகவும் வைகோ தனது பேட்டியின் இறுதியில் குற்றம் சாட்டினார்.
.jpg)