குழந்தை பிறந்தும் கண்டுகொள்ளாத காவல்துறை; தேசிய ஆணையம் தட்டியெழுப்பிய பின் வெளிவந்த கொடூரம்!
திருச்சியில் 6-ம் வகுப்பு முதல் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சிறுமிக்குக் குழந்தை பிறந்த விவகாரத்தில், அந்தச் சிறுமியின் தாய், தாத்தா உள்ளிட்ட 15 பேர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் ஆளுங்கட்சி வட்டச் செயலாளர் ஒருவருக்கும் தொடர்பு இருப்பதாகக் கூறப்படுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாதுகாக்க வேண்டிய உறவுகளே வேட்டையாடிய இந்தச் சம்பவம், கடந்த 2023-ம் ஆண்டு அந்தச் சிறுமி ஒரு குழந்தையைப் பெற்றெடுத்த போதே வெளிச்சத்திற்கு வந்திருக்க வேண்டும். ஆனால், அப்போதே முறையான விசாரணை நடத்தாமல் காவல்துறையினர் மெத்தனமாக இருந்த நிலையில், டெல்லியில் உள்ள தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் தலையிட்ட பிறகே இந்த மெகா கொடூரம் அம்பலமாகியுள்ளது.
கடந்த 2023-ம் ஆண்டு ஜூன் 14-ம் தேதி திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் இந்தச் சிறுமிக்குக் குழந்தை பிறந்தது. வறுமையைக் காரணம் காட்டி குழந்தையை மருத்துவமனையிலேயே விட்டுச் சென்ற பெற்றோரின் செயலைக் கண்டு சந்தேகமடைந்த மருத்துவமனை நிர்வாகம் போலீசாருக்குத் தகவல் அளித்தது. ஆனால், அப்போது அந்தச் சிறுமியின் கர்ப்பத்திற்கு யார் காரணம் என்பது குறித்து எந்த விசாரணையும் நடத்தப்படவில்லை. இந்த நிலையில், தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் அனுப்பிய கடிதத்தைத் தொடர்ந்து நடத்தப்பட்ட மறுவிசாரணையில், அந்தச் சிறுமி 2021-ம் ஆண்டு 6-ம் வகுப்பு படிக்கும் போதிலிருந்தே வன்கொடுமைக்கு ஆளானது தெரியவந்தது.
சிறுமியின் வாக்குமூலத்தின் அடிப்படையில், திருச்சியில் வசித்த போது தாத்தா உறவுமுறை கொண்ட நபர் மற்றும் அவரது நண்பர்கள், தாய்மாமன், அத்தை மகன் என ஒரு பட்டாளமே அந்தச் சிறுமியைச் சீரழித்துள்ளது. கரூரில் தாய் வேலை செய்த காட்டுப்பகுதியிலும், கோவில் திருவிழாக்களிலும் கூட அந்தச் சிறுமி விட்டுவைக்கப்படவில்லை. இந்த அக்கிரமங்கள் குறித்துத் தனது தாய் மற்றும் தாத்தாவிடம் அந்தச் சிறுமி கதறியும், அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் உடந்தையாக இருந்துள்ளனர். தற்போது ஸ்ரீரங்கம் அனைத்து மகளிர் போலீஸார், சிறுமியின் தாய், தாத்தா மற்றும் ஒரு திமுக வட்டச் செயலாளர் உட்பட 15 பேர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். உறவுமுறை கொண்டவர்களே சிறுமியைச் சீரழித்த இந்தச் சம்பவம் தமிழகத்தையே தலைகுனிய வைத்துள்ளது.
