ராட்சத அலையில் சிக்கிய நாட்டுப்படகு; கல்பிட்டி கடற்கரையில் கரை ஒதுங்கிய தமிழக மீனவர்களின் உடல்கள்!
தனுஷ்கோடி கடல் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது கடல் சீற்றத்தில் சிக்கி மாயமான தமிழக மீனவர்கள் இருவர், இலங்கையின் கல்பிட்டி கடற்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் மீனவ கிராமங்களில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பாம்பன் குத்துக்கால் துறைமுகத்திலிருந்து கடந்த சில தினங்களுக்கு முன்பு மீன்பிடிக்கச் சென்ற 5 மீனவர்களில், இரண்டு பேர் ராட்சத அலையில் சிக்கிக் கடலில் விழுந்தனர். அவர்களை மீட்க இந்திய கடலோரக் காவல் படை மற்றும் மீன்வளத்துறை தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்த நிலையில், இன்று அவர்களது உடல்கள் அண்டை நாடான இலங்கை கடற்கரையில் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
பாம்பன் குத்துக்கால் துறைமுகத்திலிருந்து நம்புச்சாமி என்பவருக்குச் சொந்தமான நாட்டுப் படகில் சரத்குமார், டைசன், ரீகன், டோனி மற்றும் வெள்ளைச்சாமி ஆகிய 5 மீனவர்கள் மன்னார் வளைகுடா பகுதிக்கு மீன்பிடிக்கச் சென்றனர். இவர்கள் தனுஷ்கோடி அருகே வலையை விரித்திருந்தபோது, கடலில் திடீரென சீற்றம் ஏற்பட்டு ராட்சத அலைகள் எழும்பின. இதில் நிலைகுலைந்த படகிலிருந்து பாம்பனைச் சேர்ந்த சரத்குமார் மற்றும் தூத்துக்குடி பெரியதாழையைச் சேர்ந்த டைசன் ஆகிய இருவரும் கடலுக்குள் தூக்கி வீசப்பட்டனர். சக மீனவர்கள் அவர்களைக் காப்பாற்றப் போராடியும், சீற்றம் அதிகமாக இருந்ததால் பலன் அளிக்கவில்லை.
இதனைத் தொடர்ந்து கரை திரும்பிய மீனவர்கள் அளித்த தகவலின் பேரில், இந்தியக் கடலோரக் காவல் படை ஹெலிகாப்டர் மற்றும் ரோந்துக் கப்பல்கள் மூலம் மாயமானவர்களைத் தேடி வந்தன. இந்த நிலையில், இன்று இலங்கையின் கல்பிட்டி கடற்கரை ஓரத்தில் இரண்டு மீனவர்களின் உடல்கள் சடலமாகக் கரை ஒதுங்கியிருப்பதாக இலங்கை கடற்படை மூலம் தகவல் கிடைத்துள்ளது. உயிரிழந்த மீனவர்களின் உடல்களைத் தாயகம் கொண்டு வரவும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கவும் அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பாம்பன் பகுதி மீனவர்கள் கண்ணீர் மல்கக் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்தச் சம்பவம் பாம்பன் மற்றும் தூத்துக்குடி மீனவ கிராமங்களில் பெரும் சோகத்தை ஆழ்த்தியுள்ளது.
