உச்ச நீதிமன்றம் வழங்கிய 10 நாள் கூடுதல் அவகாசம் - தமிழகத்தில் இதுவரை 16 லட்சம் பேர் அதிரடி விண்ணப்பம்!
சென்னை: தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பித்தவர்களுக்கு 15 நாட்களுக்குள் வண்ணப் புகைப்படத்துடன் கூடிய புதிய அடையாள அட்டை (EPIC) வழங்கப்படும் எனத் தேர்தல் ஆணையம் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதுமட்டுமன்றி, பெயர் சேர்க்க வழங்கப்பட்ட கால அவகாசத்தை மேலும் 10 நாட்களுக்கு நீட்டித்து உச்ச நீதிமன்றம் இன்று 'கிரீன் சிக்னல்' காட்டியுள்ளது, விடுபட்ட வாக்காளர்களுக்குப் பொன்னான வாய்ப்பாக அமைந்துள்ளது.
தமிழகத்தில் வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் உயிரிழந்தோர், இடம் பெயர்ந்தோர் என சுமார் 97.37 லட்சம் பெயர்கள் நீக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து, தகுதியுள்ள வாக்காளர்களைச் சேர்க்கச் சிறப்புத் தீவிரத் திருத்தப் பணிகள் (SIR) மேற்கொள்ளப்பட்டன. டிசம்பர் 19 முதல் ஜனவரி 18 வரை பெறப்பட்ட விண்ணப்பங்களைத் தொடர்ந்து, இன்றுடன் (ஜனவரி 30) அவகாசம் முடிவடைய இருந்தது. ஆனால், திமுக தொடர்ந்த வழக்கினை விசாரித்த உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி சூர்யா காந்த் தலைமையிலான அமர்வு, பெயர் நீக்கம் செய்யப்பட்டவர்கள் மற்றும் புதிய வாக்காளர்களின் நலன் கருதி மேலும் 10 நாட்கள் கால நீட்டிப்பு வழங்கி உத்தரவிட்டுள்ளது.
தற்போது வரை சுமார் 16 லட்சம் பேர் புதிதாகப் பெயர் சேர்க்க விண்ணப்பித்துள்ளனர். இந்த விண்ணப்பங்களை 'வார் புட்டிங்' அடிப்படையில் பரிசீலித்து வரும் தேர்தல் ஆணையம், தகுதியுள்ள நபர்களுக்கு உடனடியாக அடையாள அட்டை எண் ஒதுக்கீடு செய்து வருகிறது. "விண்ணப்பம் அங்கீகரிக்கப்பட்ட 15 நாட்களுக்குள் ஸ்பீடு போஸ்ட் மூலம் வாக்காளர் அட்டை விண்ணப்பதாரரின் வீட்டு முகவரிக்கே அனுப்பி வைக்கப்படும்" என அதிகாரிகள் உறுதி அளித்துள்ளனர். முன்பு அடையாள அட்டை பெற மாதக்கணக்கில் காத்திருக்க வேண்டிய நிலை இருந்த நிலையில், இந்த 'ஃபாஸ்ட் டிராக்' (Fast Track) முறை புதிய வாக்காளர்களைக் குஷியாக்கியுள்ளது.
குறிப்பாக, 'லாஜிக்கல் டிஸ்க்ரெபன்சி' பட்டியலில் உள்ள 1.16 கோடி வாக்காளர்களின் பெயர்களைப் பஞ்சாயத்து மற்றும் வார்டு அலுவலகங்களில் பொதுப் பார்வைக்கு வைக்கவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பிப்ரவரி 17-ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ள நிலையில், இந்த 10 நாள் கூடுதல் அவகாசத்தைப் பயன்படுத்தித் தமிழகத்தின் வாக்காளர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. "ஒரு வாக்காளர் கூட விடுபடக் கூடாது" என்பதே தேர்தல் ஆணையத்தின் 'மெயின் அஜெண்டா'வாக உள்ளது.
