பாதுகாப்பற்றத் தமிழ்நாடு! போதைப் பொருள் புழக்கம் மற்றும் சட்டம் ஒழுங்கு குறித்து திமுக அரசுக்கு பாஜக கடும் கண்டனம்!
தூத்துக்குடியில் சொற்பொழிவு ஆற்ற வருகை தந்துள்ள குருதேவ் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரைச் சந்தித்து மரியாதை செலுத்திய பின்னர், பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, தமிழகத்தின் தற்போதைய அரசியல் சூழல் மற்றும் சட்டம் ஒழுங்கு குறித்துக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.
கூட்டணி மாற்றம் மற்றும் அரசியல் கணிப்பு:
திமுக கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) வலுவடைந்து வருவதாகத் தெரிவித்தார். ராகுல் காந்தியைச் சந்திக்கக் கனிமொழி டெல்லி சென்றுள்ளதாகக் கூறுகிறார்கள். ஆனால், தமிழகக் காங்கிரஸ் தொண்டர்களேத் தாங்கள் திமுக கூட்டணியில் இருக்கிறோமா இல்லையா என்ற சந்தேகத்தில் உள்ளனர். திமுக கூட்டணியில் விரிசல் விழுந்துவிட்டது" என அவர் குறிப்பிட்டார்.
மெகா கூட்டணி:
பாஜக தலைமையிலானக் கூட்டணியில் இன்னும் பல கட்சிகள் வந்து சேரும். இது ஒரு மிகப்பெரிய மெகா கூட்டணியாக உருவெடுத்துத் தேர்தலில் வெற்றி பெறும்" என நம்பிக்கை தெரிவித்தார். ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் இடையிலானப் பிரச்சனைகள் அவர்களது உட்கட்சி விவகாரம் என்பதால் அதில் கருத்து கூற விரும்பவில்லை எனத் தவிர்த்தார். தமிழகத்தில் குற்றச் சம்பவங்கள் அதிகரித்துள்ளதைச் சுட்டிக்காட்டி அரசைச் சாடினார்.
பாலியல் வன்கொடுமைகள்:
தினசரிப் பத்திரிகைகளைப் பார்த்தால் பாலியல் வன்கொடுமைச் செய்திகளே அதிகம் உள்ளன. சிறு குழந்தைகளைக் கூட விட்டுவைக்காத அளவிற்கு நிலைமை மோசமாகியுள்ளது. இதற்குப் போதைப் பொருட்களின் புழக்கமே முக்கியக் காரணம்" என அவர் குற்றஞ்சாட்டினார்.
கொலை, கொள்ளை:
இரும்புக்கரம் கொண்டு அடக்குவோம் என்று முதலமைச்சர் கூறினார். ஆனால் தினசரி கொலைகள் நடக்கின்றன. கொங்கு மண்டலத்தில் மக்கள் வீடுகளில் தனியாக இருக்கவே பயப்படுகிறார்கள். இந்தியாவிலேயே தற்கொலைகள் அதிகம் நடக்கும் மாநிலமாகத் தமிழ்நாடு மாறியுள்ளது" என வேதனை தெரிவித்தார்.
இட ஒதுக்கீடு மற்றும் மத்திய அரசுத் திட்டங்கள்:
10% இட ஒதுக்கீடு:
பிள்ளை, வெள்ளாளர் மற்றும் இஸ்லாமியச் சமூகத்தைச் சேர்ந்த ஏழைகளுக்காக மத்திய அரசு 10% இட ஒதுக்கீடு வழங்கியுள்ளது. ஆனால் இதனை எதிர்க்கும் திமுக அரசு, நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. மத்திய அரசின் அனைத்துத் திட்டங்களையும் எதிர்ப்பதையே மாநில அரசு வழக்கமாக வைத்துள்ளது" எனச் சாடினார்.
குடும்ப ஆட்சி மற்றும் ஊழல் ஆட்சியை மக்கள் புரிந்து கொண்டுள்ளதால், வரும் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு மக்கள் வெற்றியைத் தருவார்கள் என்று நயினார் நாகேந்திரன் உறுதியாகத் தெரிவித்தார்.
.jpg)