பொங்கல் பரிசு உங்கள் அப்பன் வீட்டுப் பணமல்ல, மக்களின் வரிப்பணம்! திமுக அரசை ‘காலாவதி அரசு’ என விளாசிய எதிர்க்கட்சித் துணைத் தலைவர்!
தமிழகத்தின் நிதிநிலைமை மற்றும் பொங்கல் பரிசு விவகாரத்தில் ஆளுங்கட்சியான திமுகவை நோக்கி எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் இன்று சரமாரி விமர்சனங்களை முன்வைத்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தமிழகத்தின் கடன் சுமைக்கு மத்திய அரசுதான் காரணம் என நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியிருப்பதை ‘புதிய விஞ்ஞானப் பதில்’ எனக் கிண்டல் செய்தார். டெல்லி சென்றுள்ள நிதி அமைச்சர், அமெரிக்காவின் வரி விதிப்பால் பொருளாதார பாதிப்பு ஏற்பட்டதாகக் கூறுவது, தனது நிர்வாகத் தோல்வியை மூடிமறைக்கும் செயலாகும் என அவர் ‘பஞ்ச்’ வைத்தார்.
ஆட்சி முடியும் தருவாயில், நான்கரை ஆண்டுகளுக்குப் பிறகு சிறு, குறு தொழில்கள் பாதிப்பிற்கு ஜி.எஸ்.டி-தான் காரணம் என்று கூறுவது வேடிக்கையாக உள்ளது எனச் சாடிய ஆர்.பி.உதயகுமார், “ஏற்கனவே பொருளாதாரத்தைச் சீர்படுத்தக் குழு அமைக்கப்படும் என எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது ஸ்டாலின் கர்ஜித்தார். ஆனால் இன்று அவரது நிர்வாகக் குளறுபடியால் தமிழகம் கடனில் தத்தளிக்கிறது. எதற்கெடுத்தாலும் அமெரிக்கா, ஜப்பான், சீனாவை பாருங்கள் எனக் கூறி, திசை திருப்பும் வேலையைத்தான் இந்த ‘காலாவதி அரசு’ செய்து வருகிறது. ஆட்சிக்கு வரும் முன்பு 5,000 ரூபாய் பொங்கல் பரிசு கேட்ட ஸ்டாலின், இப்போது 3,000 ரூபாய் மட்டும் கொடுப்பது ஏன்? மக்களின் மீதான அக்கறை எங்கே போனது?” எனக் கேள்வி எழுப்பினார்.
மேலும், ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு வழங்குவதில் திமுகவினர் செய்யும் அரசியலை அவர் கடுமையாகச் சாடினார். “பொங்கல் பரிசுத் தொகையை திமுக தனது கட்சி நிதி போலக் கொடுக்கிறது. கடைகளில் திமுக கொடியைக் கட்டி, வட்டச் செயலாளர்களும் கிளைச் செயலாளர்களும் வரும் வரை மக்களைக் காத்திருக்க வைத்து அவமானப்படுத்துகிறார்கள். உதயநிதி ஸ்டாலின் முன்பு சொன்ன அதே பாணியில் நாங்களும் கேட்கிறோம்; இந்தப் பணம் உங்கள் வீட்டுப் பணமல்ல, உங்கள் அப்பன் வீட்டுப் பணமுமல்ல! இது மக்களின் வரிப்பணம். மக்களின் பணத்தை வைத்து அரசியல் செய்வது திமுகவின் மரபாகிவிட்டது. இந்தக் கடன் சுமையிலிருந்து தமிழகத்தை மீட்கவும், மீண்டும் முதன்மை மாநிலமாக்கவும் வரும் தேர்தலில் எடப்பாடியாரைத் தமிழக மக்கள் முதல்வராக்குவார்கள்” என ஆர்.பி.உதயகுமார் ஆவேசமாகத் தெரிவித்தார்.
