மிரட்டல்களுக்கு அஞ்சமாட்டோம், நாங்கள் பனங்காட்டு நரிகள் அல்ல... சிங்கங்கள்! - மதுரையில் கி.வீரமணி அதிரடி முழக்கம்! K. Veeramani Slams BJP-RSS: Says Dravidian Alliance Will Win 2026 Elections

பாஜகவின் அவதூறுகள் திராவிடக் கூட்டணி வயலுக்கு உரம்; மீண்டும் கோட்டையைப் பிடிப்பது உதயசூரியன் தான்! - பூச்சாண்டி காட்ட வேண்டாம் என ஆர்.எஸ்.எஸ்-க்கு எச்சரிக்கை!

மத்திய  பாஜக அரசு எவ்வளவு மிரட்டினாலும், எவ்வளவு பூச்சாண்டி காட்டினாலும், தமிழ்நாட்டில் எத்தனை ‘ரோடு ஷோ’ நடத்தினாலும் திராவிட மாடல் ஆட்சியை ஒருபோதும் அசைக்க முடியாது” எனத் திராவிடக் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் மதுரையில் ஆவேசமாக உரையாற்றினார். மதுரை செல்லூர் பகுதியில் நடைபெற்ற ‘பெரியார் உலகம்’ நிதி வழங்கும் விழா மற்றும் பரப்புரை பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அவர், தேர்தல் நெருங்கும் வேளையில் எதிர்க்கட்சிகள் மற்றும் மத்திய அரசின் நகர்வுகளைக் கடுமையாகச் சாடினார்.

கூட்டத்தில் பேசிய கி.வீரமணி, “இன்னும் இரண்டு மூன்று மாதங்களில் தேர்தல் வரவுள்ள நிலையில், முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான வலுவான கூட்டணியைத் தோற்கடிக்க முடியாது என்பதால் குறுக்கு வழியில் சிலர் நுழையப் பார்க்கிறார்கள். எங்களைப் பார்த்து மிரட்டினால், இந்தப் பனங்காட்டு நரி சலசலப்புக்கு அஞ்சாது; நாங்கள் நரிகள் அல்ல, சிங்கங்கள்! அவசர நிலைக் காலத்திலேயே (Emergency) ரத்தம் சிந்திய கைகள் இவை. பாஜக அரசு அமலாக்கத்துறை, சிபிஐ, வருமான வரித்துறை எனத் தனது ‘திரிசூலத்தை’ ஏவிப் பார்க்கிறது. இப்போது அதோடு தேர்தல் ஆணையத்தையும் சேர்த்துக் கொண்டுள்ளனர். நீங்கள் எத்தனை முறை குத்தினாலும் உங்கள் திரிசூலம் தான் உடையுமே தவிர, இந்த இயக்கம் அஞ்சாது” என முழக்கமிட்டார்.

மத்திய அரசின் செயல்பாடுகளை விமர்சித்த அவர், “தேர்தல் நேரத்தில் மட்டும் மோடியும், அமித்ஷாவும் தமிழைப் புகழ்ந்து பேசுவார்கள். ஆனால், தமிழுக்குக் கிள்ளிக் கொடுக்கக்கூட மனமில்லாதவர்கள், சமஸ்கிருதத்திற்கு ஆயிரக்கணக்கான கோடிகளை அள்ளிக் கொடுக்கிறார்கள். வேலை இல்லாத ஒரு கவர்னர் இங்கே அமர்ந்து கொண்டு அவதூறு பரப்புகிறார். நீங்கள் பரப்பும் அவதூறுகள் எல்லாம் எங்கள் திராவிடக் கூட்டணி வயலுக்கு இடப்படும் உரம் போன்றது. இது சமூக நீதி மண், பெரியார் மண். இங்கே ஜாதி, மத பேதமின்றி எல்லோரும் சமம் என்பதே தத்துவம். கல்வி, தொழில் வளர்ச்சி எனத் தமிழ்நாடு இன்று இந்தியாவிலேயே முதலிடத்தில் உள்ளது. ஆனால், பாஜக அரசு இருக்கும் பொதுத்துறை நிறுவனங்களை விற்றுக்கொண்டிருக்கிறது” எனச் சாடினார்.


இறுதியாக, “எடப்பாடி பழனிசாமி போன்றவர்கள் மிரட்டலுக்குப் பயந்து தங்களை அடமானம் வைத்திருக்கலாம். ஆனால், இந்தத் திராவிடக் கூட்டணி கொள்கைக்காக உருவானது. எத்தனை ரோடு ஷோக்கள் வந்தாலும் தமிழக மக்கள் ஏமாற மாட்டார்கள். மீண்டும் உதயசூரியன் தலைமையிலான கூட்டணி ஆட்சி தான் அமையப்போகிறது என்பதை வரலாறு சொல்லும்” எனத் தனது உரையை நிறைவு செய்தார். இந்த நிகழ்வில் மதுரை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் தளபதி எம்.எல்.ஏ, முன்னாள் அமைச்சர் பொன். முத்துராமலிங்கம் உள்ளிட்ட திராவிடக் கழக மற்றும் திமுக நிர்வாகிகள் பெருந்திரளாகக் கலந்துகொண்டனர்.



Previous Post Next Post

Post Ads 1

Post Ads 2

The Chennai Silks - Let the Celebrations Begin!

Silk Sarees- Buy Pure Silk and Soft Silk Sarees at The SCM Silk