குழந்தை இறந்த துக்கத்தில் இருந்த பெண்ணின் கண்முன்னே கொடூரம்; பெண் தோழிகள் இருவரிடம் போலீசார் தீவிர விசாரணை!
சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை வளாகத்தில் இன்று அதிகாலை அரங்கேறிய கொடூரக் கொலைச் சம்பவம் மாநகரையே உலுக்கியுள்ளது. மருத்துவமனை வார்டுக்குள் புகுந்த மர்ம கும்பல், ரவுடி ஒருவரைப் பட்டாகத்தியால் சரமாரியாக வெட்டிச் சாய்த்தது. இந்த 'பகீர்' சம்பவத்தால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகளும் பொதுமக்களும் அலறியடித்து ஓடியதால் அங்கு பெரும் போர்க்களமே உருவானது.
கொல்லப்பட்ட நபர் சென்னை கொளத்தூர் பகுதியைச் சேர்ந்த ரவுடி ஆதி என்கிற ஆதிகேசவன் (20) என்பது தெரியவந்துள்ளது. ராஜமங்கலம் காவல் நிலைய 'ஹிஸ்டரி ஷீட்டர்' (History Sheeter) பட்டியலிலிருக்கும் இவர் மீது கொலை உட்பட 9-க்கும் மேற்பட்ட கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவருக்கும் ஆவடியைச் சேர்ந்த சுசித்ரா என்பவருக்கும் கள்ளத்தொடர்பு இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. கடந்த மாதம் சுசித்ராவுக்குப் பெண் குழந்தை பிறந்த நிலையில், துரதிர்ஷ்டவசமாக அந்தக் குழந்தை நேற்று உயிரிழந்தது. இதுகுறித்துத் தகவல் அறிந்த ஆதி, தனது மற்றொரு தோழியான சாருமதியுடன் நேற்று இரவு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு வந்துள்ளார்.
இரவு முழுவதும் மருத்துவமனையின் புதிய வார்டு பகுதியில் தங்கியிருந்தபோது, இன்று அதிகாலை தலைக்கவசம் அணிந்து வந்த மூன்று பேர் கொண்ட கும்பல், ஆதியை குறிவைத்துத் தாக்கியது. தப்பியோட முயன்ற ஆதியைச் சூழ்ந்து கொண்ட அந்த 'ஸ்கெட்ச்' கும்பல், அவர் உடலில் பல இடங்களில் வெட்டிவிட்டு மின்னல் வேகத்தில் மறைந்தது. ரத்த வெள்ளத்தில் உயிருக்குப்போராடிய ஆதியை மருத்துவர்கள் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதித்த போதும், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த கீழ்ப்பாக்கம் போலீசார், ஆதியின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். சிசிடிவி (CCTV) காட்சிகளை ஆய்வு செய்ததில், கொலையாளிகள் திட்டமிட்டு இந்த 'ஆபரேஷனை' முடித்தது உறுதியாகியுள்ளது. இந்த விவகாரத்தில் ஆதியின் பெண் தோழிகளான சுசித்ரா மற்றும் சாருமதி ஆகியோரை போலீசார் பிடித்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். பழிக்குப் பழியாக இந்தக் கொலை நடந்ததா அல்லது வேறு ஏதேனும் பின்னணி இருக்கிறதா என்பது குறித்து 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுத் தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.


