வறுமையிலும் ஜொலிக்கும் நேர்மை! சாலையில் கிடந்த நகையை ஒப்படைத்த பத்மா; தி.நகரில் நெகிழ்ச்சி!
வறுமையிலும் நேர்மை மாறாத ஒரு தூய்மைப் பணியாளரின் செயலால், சென்னையில் காணாமல் போன ₹45 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள் உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டன.
சென்னை தி.நகர் பகுதியில் குப்பைகளை அள்ளிக் கொண்டிருந்தபோது கிடைத்த 45 சவரன் தங்க நகைகளை, சிறிதும் ஆசைப்படாமல் காவல் நிலையத்தில் ஒப்படைத்த தூய்மைப் பணியாளர் பத்மா என்பவருக்குப் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. ஒரு பக்கம் சொத்துக்காகச் சொந்தங்களையே வஞ்சிக்கும் செய்திகளுக்கு மத்தியில், கான்கிரீட் காடான சென்னையில் நிகழ்ந்துள்ள இந்தச் சம்பவம் மனிதநேயத்தின் அடையாளமாகப் பார்க்கப்படுகிறது.
சென்னை தி.நகர் முப்பாத்தம்மன் கோவில் தெரு மற்றும் வண்டிக்காரன் சாலை சந்திப்பில் இன்று மாலை தூய்மைப் பணியாளர் பத்மா வழக்கம்போலக் குப்பைகளை அள்ளும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அங்குச் சந்தேகத்திற்கிடமான முறையில் கிடந்த ஒரு பிளாஸ்டிக் கவரை எடுத்துப் பார்த்தபோது, அதற்குள் கட்டுக்கட்டாகத் தங்க நகைகள் இருப்பதைக் கண்டு அவர் அதிர்ச்சியடைந்தார். அந்த நகைகளின் மதிப்பு ₹45 லட்சம் இருக்கும் எனத் தெரிந்தும், உடனடியாக அந்தப் பையை எடுத்துச் சென்று பாண்டி பஜார் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார் பத்மா.
போலீசார் நடத்திய விசாரணையில், நங்கநல்லூரைச் சேர்ந்த நகை வியாபாரி ரமேஷ் என்பவர், தனது நண்பரைப் பார்க்க வந்தபோது தவறுதலாக அந்த நகைப்பையைத் தள்ளுவண்டி கடையில் வைத்துவிட்டுச் சென்றது தெரியவந்தது. ஏற்கனவே ரமேஷ் தனது நகைகளைத் தொலைத்துவிட்டது குறித்து வாய்மொழியாகப் புகார் அளித்திருந்த நிலையில், பத்மா ஒப்படைத்த நகைகள் ரமேஷுக்குச் சொந்தமானவை என்பது உறுதி செய்யப்பட்டது. நகைக்கான ஆவணங்களைச் சரிபார்த்த பின்னர், அதனை உரியவரிடம் ஒப்படைக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். வறுமையான சூழலிலும் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள சொத்தை மதிக்காமல், நேர்மையுடன் செயல்பட்ட பத்மாவை சென்னை காவல் துறை உயர் அதிகாரிகள் நேரில் அழைத்து வெகுவாகப் பாராட்டி வருகின்றனர்.
