ராமர் புனிதப் பாதையில் 9 மாதங்களாக நீடிக்கும் விதிமீறல்; ஆன்லைன் விநியோக நிறுவனங்களுக்குக் கிடுக்கிப்பிடி!
அயோத்தி ராமர் கோவிலைச் சுற்றியுள்ள ‘பஞ்ச்கோசி பரிக்ரமா’ புனிதப் பாதையில் அசைவ உணவுகளை ஆன்லைன் மூலம் விநியோகம் செய்வதற்கு அயோத்தி மாநகராட்சி அதிரடியாகத் தடை விதித்துள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் பிரம்மாண்ட ராமர் கோவில் கட்டப்பட்டதைத் தொடர்ந்து, அந்த நகரின் புனிதத்தைப் பேணும் வகையில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக, அயோத்தி மற்றும் ஃபைசாபாத்தை இணைக்கும் 14 கிலோமீட்டர் நீளத்திலான ‘ராமர் புனிதப் பாதையில்’ மது மற்றும் இறைச்சி விற்பனைக்கு கடந்த மே 2025-லேயே தடை விதிக்கப்பட்டிருந்தது. இருப்பினும், இந்தத் தடையைச் சில நிறுவனங்கள் மற்றும் ஹோட்டல்கள் துஷ்பிரயோகம் செய்வதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, தற்போது விதிமுறைகள் மேலும் கடுமையாக்கப்பட்டுள்ளன.
அயோத்தி மாநகராட்சி வெளியிட்ட அறிவிப்பின்படி, புனிதப் பாதையில் அமைந்துள்ள ஹோட்டல்கள் மற்றும் தங்கும் விடுதிகளில் அசைவ உணவுகள் மற்றும் மதுபானங்கள் ரகசியமாகப் பரிமாறப்படுவதாக மாவட்ட நிர்வாகத்திற்குத் தொடர் புகார்கள் வந்தன. மேலும், ஸ்விக்கி, ஜொமாட்டோ போன்ற ஆன்லைன் உணவு விநியோகத் தளங்கள் மூலமாகச் சுற்றுலாப் பயணிகளும், உள்ளூர்வாசிகளும் அசைவ உணவுகளைத் தொடர்ந்து வரவழைத்துப் பயன்படுத்துவது கண்டறியப்பட்டது. மாநகராட்சி தடையை அறிவித்து ஒன்பது மாதங்கள் கடந்த பின்பும், இன்னும் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் மதுபான விற்பனை தங்குதடையின்றி நடப்பதாக உள்ளூர் மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இது குறித்துப் பேசிய அயோத்தி மாநகராட்சியின் உதவி உணவு ஆணையர் மாணிக் சந்திர சிங், "தடை இருந்தபோதிலும் ஆன்லைன் தளங்கள் மூலம் அசைவ உணவுகள் விநியோகிக்கப்படுவது குறித்து எங்களுக்குப் புகார்கள் வந்துள்ளன; எனவே இப்போது ஆன்லைன் விநியோகத்திற்கும் முற்றிலுமாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார். இது தொடர்பாக அனைத்து ஹோட்டல் உரிமையாளர்கள், கடைகள் மற்றும் ஆன்லைன் விநியோக நிறுவனங்களுக்குத் தெளிவான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்தத் தடையை மீறுபவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், புனிதப் பாதை முழுவதும் தொடர் கண்காணிப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். அயோத்தியின் ஆன்மீக மாண்பைச் சிதைக்கும் எத்தகைய செயல்களும் அனுமதிக்கப்படமாட்டாது என மாவட்ட நிர்வாகம் உறுதிபடத் தெரிவித்துள்ளது.
