“நடிகர் திலகம் சிவாஜி கணேசன் தான் என்றும் பராசக்தி நாயகன்!” - முன் வெளியீட்டு விழாவில் அதர்வா, ரவி மோகன் நெகிழ்ச்சி!
தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரம் சிவகார்த்திகேயன் நடிப்பில், பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நாளை மறுநாள் வெளியாக உள்ள ‘பராசக்தி’ திரைப்படத்தின் முன் வெளியீட்டு விழா இன்று திருச்சியில் கோலாகலமாக நடைபெற்றது. தனது கல்லூரி காலங்களில் மேடையேறி உற்சாகம் பெற்ற அதே மண்ணில், இன்று ஒரு நட்சத்திரமாகத் தனது 25-வது படத்தின் விழாவில் பங்கேற்ற சிவகார்த்திகேயன், திருச்சி மக்களிடையே உணர்ச்சிப்பூர்வமாக உரையாற்றினார். இந்த விழாவில் நடிகை ஸ்ரீ லீலா, நடிகர்கள் அதர்வா, ரவி மோகன் மற்றும் படக்குழுவினர் பலரும் கலந்துகொண்டு ‘பராசக்தி’ குறித்த சுவாரசியமான தகவல்களைப் பகிர்ந்து கொண்டனர்.
மேடையில் பேசிய சிவகார்த்திகேயன், “திருச்சிக்கு வந்து உங்களைச் சந்திப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி. இந்தப் படம் வெறும் கற்பனையல்ல, நம் மண்ணிற்காகவும் மொழிக்காகவும் தியாகம் செய்தவர்களுக்கு நன்றி கூறும் ஒரு வரலாற்றுப் பதிவு. இந்தப் படத்தில் வரும் ‘செழியன்’ போன்ற கதாபாத்திரங்கள் நம் வீட்டுப் பிள்ளைகளாகத் திகழ்வார்கள். பெரியவர்கள் தங்கள் பிள்ளைகளைத் திரையரங்கிற்கு அழைத்துச் சென்று நம் மண்ணின் போராட்ட வரலாற்றைக் காட்ட வேண்டும். எதிர்மறையான விஷயங்கள் வேகமாகப் பரவினாலும், உண்மை பொறுமையாக வளர்ந்து நிலைத்து நிற்கும். ‘பராசக்தி’ என்று சொன்னாலே அதன் நாயகன் என்றும் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் தான். இந்தப் படம் நிச்சயம் மக்களுக்கு ஒரு உந்துசக்தியாக (Inspiring) இருக்கும்” என நம்பிக்கையுடன் தெரிவித்தார்.
முன்னதாகப் பேசிய நடிகர் அதர்வா, கடந்த ஒரு ஆண்டாகப் படப்பிடிப்பிற்காகத் திருச்சிக்கு வந்து செல்வதாகவும், இங்கிருக்கும் ஆற்றல் (Energy) வேறெங்கும் இல்லை என்றும் புகழாரம் சூட்டினார். பத்தாண்டுகளுக்கு ஒருமுறை வரும் ஒரு தரமான படைப்பாகப் ‘பராசக்தி’ இருக்கும் என்றும், சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடித்தது பெருமையளிப்பதாகவும் குறிப்பிட்டார். நடிகை ஸ்ரீ லீலா பேசுகையில், சமூகத்திடம் கேள்வி கேட்கும் ஒரு புரட்சிகரமான கதாபாத்திரத்தில் தான் நடித்திருப்பதாகத் தெரிவித்தார்.
நீண்ட இடைவேளைக்குப் பிறகு மிரட்டலான வில்லனாகத் திரையில் தோன்றும் ரவி மோகன், “திருச்சி எனது தாயார் வளர்ந்த ஊர் என்பதால் எனக்கு மிகவும் நெருக்கமானது. ஆரம்பத்தில் எதிர்மறை கதாபாத்திரத்தில் நடிக்கத் தயக்கம் இருந்தாலும், இயக்குனர் சுதாவின் நேர்த்தியான செதுக்கலால் தற்போது அது ஒரு புதிய அவதாரமாக மாறியுள்ளது. ஒவ்வொரு காட்சியிலும் மனதிருப்தியுடன் உழைத்துள்ளோம்; நானும் சிவகார்த்திகேயனும் திரையில் சமமாகப் போட்டி போட்டு நடித்துள்ளோம்” எனத் தனது மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டார். பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்ட இந்த விழா, திருச்சி மாநகரையே அதிர வைத்தது.
