சிங்கப் பெண்ணாக ராகுலைச் சந்தித்த கனிமொழி! எடப்பாடி பழனிசாமிக்குச் செல்வப்பெருந்தகை திருவாரூரில் கடும் பதிலடி!

ஆட்சியில் பங்கு குறித்துத் தலைமை முடிவு செய்யும் - பாஜகவின் ஜிஎஸ்டி மற்றும் இரட்டை வேடத்தைத் தோலுரித்த காங்கிரஸ் மாநிலத் தலைவர்!


திருவாரூரில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் புதிய மாவட்டத் தலைவர் நீலன் அசோகன் பதவியேற்பு விழாவில் பங்கேற்ற தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை, செய்தியாளர்களிடம் பேசுகையில் தமிழக அரசியல், கூட்டணி மற்றும் பொருளாதார விவகாரங்கள் குறித்துப் பல அதிரடி கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார்.

கனிமொழி - ராகுல் சந்திப்பு மற்றும் கூட்டணி: 

ராகுல் காந்தியை கனிமொழி சந்தித்தது குறித்து எடப்பாடி பழனிசாமி முன்வைத்த விமர்சனங்களுக்குச் செல்வப்பெருந்தகை ஆவேசமாகப் பதிலடி கொடுத்தார்.  எடப்பாடி பழனிசாமியைப் போல முகத்தை மூடிக்கொண்டு மாற்று காரில் கனிமொழி சென்று ராகுலைச் சந்திக்கவில்லை; அவர் ஒரு சிங்கப் பெண்ணாக நேரில் சென்று சந்தித்துள்ளார்" என அவர் சாடினார். வரும் ஒரு வார காலத்திற்குள் தொகுதிப் பங்கீடு குறித்த அதிகாரப்பூர்வப் பேச்சுவார்த்தைகள் தொடங்கும்.


தமிழக ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்பது குறித்துக் காங்கிரஸ் மற்றும் திமுக ஆகிய இரு கட்சிகளின் தலைமையே இணைந்து முடிவு செய்யும். இதற்காகத் திமுகவிற்கு எவ்வித நெருக்கடியும் அளிக்க மாட்டோம், ஆனால் எங்களது தேவைகளைக் கேட்டுப் பெறுவோம் எனத் தெளிவுபடுத்தினார்.

மத்திய அரசின் செயல்பாடுகள் மற்றும் பிரதமர் மோடியின் பேச்சு குறித்து அவர் கூறியதாவது: தமிழகத்திற்கு வரும்போது தமிழைப் புகழ்ந்து பேசும் பிரதமர் மோடி, பீகார் போன்ற மாநிலங்களுக்குச் சென்றால் தமிழர்களை மோசமானவர்கள் என்று பேசுகிறார். இது அவரது இரட்டை வேடத்தைக் காட்டுகிறது.

ஜிஎஸ்டி பாதிப்பு: 

பாஜக ஆட்சியில் ஜிஎஸ்டி 40% வரை உயர்த்தப்பட்டதால் சிறு, குறு தொழில்கள் சிதைந்துவிட்டன. உலகப் பொருளாதார நிபுணர்களின் எச்சரிக்கையால்தான் தற்போது வரி குறைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் உற்பத்தித் திறன் அதிகரித்துள்ளதால் கடன் கிடைப்பதில் சிக்கலில்லை; ஆனால் உத்தரப் பிரதேசத்திற்குக் கடன் வழங்க உலக வங்கி மறுத்துவிட்டது. எனவே எதிர்க்கட்சிகள் தமிழகத்தின் கடன் குறித்துக் கவலைப்படத் தேவையில்லை.

தமிழக அரசுக்குக் கோரிக்கை: 

சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருந்தாலும், ஒரு சில விடுதிகள் மற்றும் கல்லூரிகளில் சமூக விரோதிகள் செய்யும் செயல்கள் அரசுக்குக் கெட்ட பெயரைத் தருகின்றன; இதனைத் தடுக்கக் கடும் நடவடிக்கை வேண்டும் என வலியுறுத்தினார். மேலும், திண்டிவனத்தில் சீரமைக்கப்படும் பேருந்து நிலையத்திற்கு பழைய பெயரான 'இந்திரா காந்தி பேருந்து நிலையம்' என்பதையே சூட்ட வேண்டும் என முதலமைச்சருக்குக் கோரிக்கை விடுத்தார்.



Previous Post Next Post

Post Ads 1

Post Ads 2

The Chennai Silks - Let the Celebrations Begin!

Silk Sarees- Buy Pure Silk and Soft Silk Sarees at The SCM Silk