விஜய்க்கு நெருக்கடி கொடுக்க வேண்டிய அவசியம் பாஜகவுக்கு இல்லை! வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த மாநிலத் தலைவர்!
திமுக அரசைத் தமிழகத்தில் இருந்து அகற்ற வேண்டும் என்பது மட்டுமே எங்களது தற்போதைய நோக்கம்; கூட்டணி ஆட்சி என நாங்கள் எங்கும் சொல்லவில்லை” என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் மதுரையில் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடியின் தமிழக வருகைக்கான முன்னேற்பாடுகள் மற்றும் கூட்டணி குறித்த வதந்திகளுக்கு விளக்கம் அளிக்கும் வகையில், மதுரையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த நயினார் நாகேந்திரன், அரசியல் களத்தில் நிலவும் பல்வேறு விவாதங்களுக்கு அதிரடியாகப் பதிலளித்தார். குறிப்பாகத் தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் மற்றும் தொகுதிப் பங்கீடு குறித்த செய்திகளுக்கு அவர் முற்றுப்புள்ளி வைத்தார்.
செய்தியாளர்களிடம் பேசிய நயினார் நாகேந்திரன், "பிரதமர் மோடி தமிழகம் வரும் நாளில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சியினர் பங்கேற்கும் மாபெரும் ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. பிரதமர் பங்கேற்கும் மாவட்டம் இன்னும் இறுதி செய்யப்படவில்லை என்றாலும், மதுரையில் கூட்டம் நடந்தால் பாண்டிகோவில் அம்மா திடலில் நடத்தத் திட்டமிட்டுள்ளோம்" என்றார். பாமக உடனான உறவு குறித்துப் பேசுகையில், "நாங்கள் அன்புமணி ராமதாஸுடன் ஏற்கனவே கூட்டணியில் தான் உள்ளோம். கூட்டணியில் யார் யார் இடம்பெறுவார்கள் என்பதை எடப்பாடி பழனிசாமியும், அமித்ஷாவும் பேசி முடிவு செய்வார்கள்" எனத் தெரிவித்தார்.


