‘நீயே விடை’ நிறுவனத்திற்குச் செக் வைத்த உயர் நீதிமன்றம்; கார்ட்டூன்களுக்கு மட்டும் தளர்வு அளித்து நீதிபதி உத்தரவு!
தனது அனுமதி இன்றி, தனது பெயர், புகைப்படங்கள் மற்றும் பட்டங்களை வர்த்தக ரீதியில் பயன்படுத்த இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என நடிகர் கமல்ஹாசன் தொடர்ந்த வழக்கில், சென்னை உயர் நீதிமன்றம் இன்று அதிரடியான இடைக்காலத் தடையை விதித்துள்ளது.
மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும், உலகநாயகனுமான கமல்ஹாசன், சென்னையைச் சேர்ந்த ஒரு நிறுவனம் தனது அடையாளங்களைத் தவறாகப் பயன்படுத்துவதாகக் கூறி நீதிமன்றத்தை நாடியிருந்தார். பிரபலங்களின் ‘தனி உரிமை’ (Personality Rights) தொடர்பான இந்த வழக்கு, வர்த்தக உலகில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. தனது பிரபல வசனங்கள் முதல் ‘உலகநாயகன்’ என்ற பட்டம் வரை எதையும் அனுமதியின்றி விற்கக் கூடாது என்பதில் கமல் தரப்பு உறுதியாக உள்ளது.
சென்னையைச் சேர்ந்த ‘நீயே விடை’ என்ற நிறுவனம், கமல்ஹாசனின் புகைப்படம், பெயர், ‘உலகநாயகன்’ என்ற பட்டம் மற்றும் அவரது திரைப்படங்களின் புகழ்பெற்ற வசனங்களை அவரது அனுமதியின்றி டி-சர்ட்கள் மற்றும் சட்டைகளில் அச்சிட்டு விற்பனை செய்து வந்தது. இது தனது தனி உரிமையைப் பாதிப்பதாகக் கூறி, கமல்ஹாசன் சென்னை உயர் நீதிமன்றத்தில் உரிமையியல் வழக்குத் தாக்கல் செய்தார். இந்த வழக்கு நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது கமல் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சதீஷ் பராசரன், "தனி உரிமையைப் பாதுகாக்கும் வகையில், சம்பந்தப்பட்ட நிறுவனம் மட்டுமல்லாது வேறு எந்த நிறுவனமும் அனுமதியின்றி இத்தகைய செயல்களில் ஈடுபடத் தடை விதிக்க வேண்டும்" என வாதிட்டார்.
வழக்கறிஞர்களின் வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதி, கமல்ஹாசனின் பெயர், புகைப்படம் மற்றும் பட்டங்களை வர்த்தக ரீதியில் பயன்படுத்த இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டார். இருப்பினும், "கார்ட்டூன்களில் கமல் படத்தை ஊடகங்கள் மற்றும் தனிநபர்கள் பயன்படுத்துவதற்கு இந்தத் தடை பொருந்தாது" எனத் தனது உத்தரவில் நீதிபதி தெளிவுபடுத்தினார். மேலும், இந்தத் தடை உத்தரவு குறித்துத் தமிழ் மற்றும் ஆங்கிலப் பத்திரிகைகளில் விளம்பரம் செய்ய வேண்டும் என கமல் தரப்புக்கு அறிவுறுத்திய நீதிபதி, ‘நீயே விடை’ நிறுவனம் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கைப் பிப்ரவரி மாதத்திற்குத் தள்ளிவைத்தார். திரையுலகப் பிரபலங்களின் அடையாளங்களைப் பயன்படுத்திப் லாபம் ஈட்டும் நிறுவனங்களுக்கு இந்தத் தீர்ப்பு ஒரு எச்சரிக்கையாக அமைந்துள்ளது.
