விஷமத்தனம் செய்வாரா ஆளுநர்? - சட்டமன்றக் கூட்டத்தொடரை வைத்து அமைச்சர் ரகுபதி எச்சரிக்கை!
பாஜகவின் புதிய கூட்டணியாகத் தணிக்கை வாரியமும் சேர்ந்துள்ளது; சிபிஐ, அமலாக்கத்துறை வரிசையில் தற்போது தணிக்கை வாரியத்தையும் பாஜக தனது அரசியல் ஆயுதமாகப் பயன்படுத்தி வருகிறது” எனத் தமிழ்நாடு இயற்கை வளங்கள் துறை அமைச்சர் ரகுபதி சாடியுள்ளார்.
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மூன்றரை மணி நேர ஆய்வுக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ரகுபதி, ஆளுநர் ஆர்.என்.ரவியின் செயல்பாடு, ‘ஜனநாயகன்’ படச் சிக்கல் மற்றும் தேர்தல் கூட்டணி குறித்துத் தனது பாணியில் மிகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். இந்த ஆய்வுக் கூட்டத்தில் அமைச்சர் மெய்யநாதன், மாவட்ட ஆட்சியர் அருணா உள்ளிட்டோர் கலந்துகொண்டு வளர்ச்சிப் பணிகள் குறித்து விவாதித்தனர்.
செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ரகுபதி, "பாஜக பல அதிகாரிகளின் குழுக்களோடு தேர்தல் களத்தைச் சந்திக்கிறது; அதில் புதிய வரவுதான் சென்சார் போர்டு. இதனைச் சந்திக்க திமுக கூட்டணி தயாராக உள்ளது" என்றார். ‘ஜனநாயகன்’ பட விவகாரத்தில் திமுகவைச் சம்பந்தப்படுத்துவது முட்டாள்தனம் என்றும், பாஜக எங்களது பேச்சை ஒருபோதும் கேட்காது என்றும் அவர் தெளிவுபடுத்தினார். நயினார் நாகேந்திரனின் ‘தை பிறந்தால் வழி பிறக்கும்’ என்ற கருத்திற்குப் பதிலளித்த அவர், "எங்களுக்குத் திராவிட மாடல் ஆட்சி தொடர்வதே வழி பிறப்பதாகும்; நயினாருக்கு வேண்டுமானால் டெல்லியில் ஏதாவது பதவி கிடைக்கட்டும், வாழ்த்துக்கள்" என எள்ளி நகையாடினார்.
ஆளுநர் குறித்துக் கேட்டபோது ஆவேசமான அவர், "ஆளுநர் ஒருவர் இருப்பதே நாங்கள் மறந்துவிட்டோம். சட்டமன்றக் கூட்டத்தொடர் தொடங்கும்போது அவர் என்ன செய்யப்போகிறார் என்று பார்ப்போம். நல்ல முறையில் நடந்து கொள்கிறாரா அல்லது மீண்டும் தனது விஷமத்தனத்தையும், குறும்புத்தனத்தையும் காட்டப் போகிறாரா என்பதைத் தமிழ்நாடு அன்று பார்க்கத்தான் போகிறது" என எச்சரிக்கை விடுத்தார். மேலும், ராமதாஸின் பாராட்டு என்பது அரசுப் பணிக்கான அங்கீகாரமே தவிர, அது கூட்டணிக்கு அச்சாரமாகாது எனத் தெரிவித்த அவர், அதிமுக-பாஜக கூட்டணி என்பது மெகா கூட்டணி அல்ல, அது வெறும் ‘மெகா ஸ்டார்’ கூட்டணி மட்டும்தான் என விமர்சித்தார். தமிழக முதல்வர் இலக்கு நிர்ணயித்துள்ள 200 தொகுதிகளை விட அதிகமான இடங்களை திமுக கூட்டணி நிச்சயம் வெல்லும் எனவும் அவர் உறுதிபடத் தெரிவித்தார்.
