ஜனநாயகன் பட விவகாரத்தில் அரசியல் இல்லை; திமுகவுடன் பேச்சுவார்த்தை சுமூகம் - சத்யமூர்த்தி பவனில் அதிரடி!
இந்திய அரசியல் நிர்ணய சபை உறுப்பினராக இருந்த மறைந்த மூத்த தலைவர் டி.எம். காளியண்ணனின் 105-ஆவது பிறந்தநாளையொட்டி, சென்னை சத்யமூர்த்தி பவனில் அவரது திருவுருவப்படத்திற்குச் செல்வப்பெருந்தகை, திருநாவுக்கரசர் மற்றும் பீட்டர் அல்போன்ஸ் உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய செல்வப்பெருந்தகை, கட்சிக்குள்ளும் கூட்டணிக்குள்ளும் சலசலப்பை ஏற்படுத்தும் வகையில் பேசும் நிர்வாகிகளுக்குக் கடும் எச்சரிக்கை விடுத்தார்.
செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய செல்வப்பெருந்தகை, "தொகுதி பங்கீடு மற்றும் கூட்டணி குறித்துப் பேசுவதற்கு எனத் தனியாகக் குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்தக் குழுவினர் மட்டுமே இது குறித்துப் பேச வேண்டும்; மற்ற நிர்வாகிகள் தங்களது தனிப்பட்ட கருத்துக்களைத் தலைமையிடம்தான் கூற வேண்டுமே தவிர, ஊடகங்களில் விவாதிக்கக் கூடாது" எனத் திட்டவட்டமாகத் தெரிவித்தார். இந்தியா கூட்டணி மிகவும் வலுவாக இருப்பதாகவும், திமுகவுடன் தொகுதிப் பங்கீடு குறித்துச் சுமுகமான பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் அவர் உறுதிபடத் தெரிவித்தார்.
தொடர்ந்து ‘ஜனநாயகன்’ திரைப்பட விவகாரம் குறித்துப் பேசிய அவர், "மத்திய பாஜக அரசு அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ-யைத் தவறாகப் பயன்படுத்துவது போல், தற்போது தணிக்கை வாரியத்தையும் ஒரு ஆயுதமாகப் பயன்படுத்துகிறது. தணிக்கைச் சான்று வழங்கத் தனி நீதிபதி உத்தரவிட்ட பிறகும், மேல்முறையீடு செய்து படத்திற்கு நெருக்கடி கொடுத்தது கண்டிக்கத்தக்கது. இந்தப் படத்திற்காக காங்கிரஸ் குரல் கொடுத்ததில் எவ்வித அரசியலும் இல்லை; கருத்துச் சுதந்திரத்திற்காகவே ஆதரவு தெரிவித்தோம்" என்றார். இதற்கிடையில், தேமுதிக மாநாட்டில் விஜய பிரபாகரன் செய்த விமர்சனத்திற்குப் பதிலளித்த அவர், "காங்கிரஸ் எப்போதும் நேர்மையாகச் செயல்படும் கட்சி; நாங்கள் ஒருபோதும் கொல்லைப்புற அரசியல் செய்யமாட்டோம்" எனப் பதிலடி கொடுத்தார். பேட்டியின் இறுதியில் பேசிய திருநாவுக்கரசர், ஜனநாயகன் படத்திற்குத் திட்டமிட்டே முட்டுக்கட்டை போடப்படுவதாகக் குற்றம் சாட்டினார்.
