மத அரசியல் போல் போதைப் பொருள் கடத்தலும் ஒரு சதி! எஸ்டிபிஐ கட்சி அலுவலகத் திறப்பு விழாவில் அதிரடிப் பேச்சு!
மத்திய பாஜக அரசு அமலாக்கத்துறை மற்றும் தேர்தல் ஆணையம் போன்றே, தற்போது தணிக்கை வாரியத்தையும் (Censor Board) தனது கைக்குள் வைத்துக்கொண்டு ‘ஜனநாயகன்’ திரைப்படத்தை முடக்க நினைக்கிறது என எஸ்டிபிஐ (SDPI) கட்சியின் மாநிலத் தலைவர் நெல்லை முபாரக் குற்றம் சாட்டியுள்ளார்.
தூத்துக்குடி வ.உ.சி சாலையில் அமைந்துள்ள பள்ளிவாசல் அருகே எஸ்டிபிஐ கட்சியின் புதிய மாவட்ட அலுவலகத்தை இன்று நெல்லை முபாரக் திறந்து வைத்தார். மாவட்டத் தலைவர் அஷ்ரப் அலி தலைமையில் நடைபெற்ற இந்தத் திறப்பு விழாவிற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தமிழகத்தின் தற்போதைய அரசியல் சூழல், போதைப் பொருள் கடத்தல் மற்றும் உள்ளூர் பிரச்சினைகள் குறித்துத் தனது காரசாரமான கருத்துக்களைப் பதிவு செய்தார்.
செய்தியாளர்களிடம் பேசிய நெல்லை முபாரக், "ஜனநாயகன் திரைப்படத்தை வெளியிடத் தணிக்கைத் துறை மறுப்பது கருத்துச் சுதந்திரத்திற்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தலாகும். மக்கள் மனதில் உள்ள கருத்துக்களை ஒருபோதும் முடக்க முடியாது" என்றார். தொடர்ந்து தமிழகத்தில் நிலவும் போதைப் பொருள் கடத்தல் குறித்துப் பேசிய அவர், "மத்திய அரசு எப்படி மத அரசியலை ஒரு கருவியாகப் பயன்படுத்துகிறதோ, அதேபோல் போதைப் பொருள் கடத்தலும் ஒரு திட்டமிட்ட சதி. இதனைத் தடுக்க முதலமைச்சர் ஒரு இயக்கத்தையே நடத்தி வந்தாலும், காவல்துறையினருக்கு அதனைத் தடுக்கும் எண்ணம் இருப்பதாகத் தெரியவில்லை. தமிழக அரசு இதற்கு உடனடியாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்" என வலியுறுத்தினார்.
கனிம வளக் கடத்தல் தொடர்பாகக் கடையம் திமுக நிர்வாகி விலகியது குறித்த கேள்விக்கு, "தென் மாவட்டங்களில் இருந்து கேரளாவுக்குக் கனிம வளங்கள் கொள்ளை லாபத்திற்காகக் கடத்தப்படுகின்றன. இதனைத் தடுக்க வேண்டிய காவல்துறை மந்த நிலையில் செயல்படுகிறது" எனச் சாடினார். மேலும், தூத்துக்குடி மீன்பிடித் துறைமுகத்தில் நிலுவையில் உள்ள தூண்டில் பாலம் பணியை முடிக்க வேண்டும் என்றும், பொட்டாலுரணி கிராமத்தில் சுகாதாரச் சீர்கேட்டை ஏற்படுத்தும் மீன் கழிவு ஆலையை உடனடியாக அகற்ற வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார். 2026 சட்டமன்றத் தேர்தல் கூட்டணி குறித்து வரும் ஜனவரி மாதம் நடைபெறும் பொதுக்குழுவில் இறுதி முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்த அவர், தங்களுக்கு ஆட்சியில் பங்கு வேண்டும் என்ற எண்ணம் இல்லை என்பதையும் தெளிவுபடுத்தினார்.
.
