முஸ்லிம் அல்லாதோர் மற்றும் சட்டத்துறை நிபுணர் நியமிக்கப்படாதது ஏன்? - தமிழக அரசுக்கு நீதிபதிகள் கிடுக்கிப்பிடி!
தமிழக வக்பு வாரிய உறுப்பினர்கள் நியமனத்தில் சட்ட விதிகள் முறையாகப் பின்பற்றப்படவில்லை எனக் கூறி, தற்போதுள்ள உறுப்பினர்கள் பணியாற்றச் சென்னை உயர்நீதிமன்றம் இன்று இடைக்காலத் தடை விதித்து அதிரடி உத்தரவிட்டுள்ளது.
தமிழக வக்பு வாரியத்திற்குத் தலைவர் உட்பட 10 உறுப்பினர்களை நியமித்து, கடந்த 2025-ஆம் ஆண்டு நவம்பர் 28-ஆம் தேதி தமிழக அரசின் சிறுபான்மையினர் நலத்துறை அரசாணை வெளியிட்டிருந்தது. இந்த நியமனங்களில் சட்ட ரீதியான ஓட்டைகள் இருப்பதாகக் கிளம்பியுள்ள புகார், தற்போது வாரியத்தின் செயல்பாட்டிற்கே முட்டுக்கட்டை போட்டுள்ளது. அரசின் இந்த உத்தரவை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில், உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ள இந்தத் தடை உத்தரவு தமிழக அரசுக்குப் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.
சென்னை சாந்தோம் பகுதியைச் சேர்ந்த சவுகத் அலி முகமது என்பவர் தாக்கல் செய்த மனுவில், வக்பு வாரியச் சட்டத்தின்படி உறுப்பினர்களை நியமிக்கும்போது முஸ்லிம் அல்லாத இருவர் மற்றும் சட்டத்துறையைச் சேர்ந்த ஒரு பிரதிநிதி கண்டிப்பாக இடம்பெற வேண்டும் என்ற விதிமுறை உள்ளது. ஆனால், தமிழக அரசு வெளியிட்ட தற்போதைய வாரிய நியமனப் பட்டியலில் இந்த விதிகள் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளன என அவர் குற்றம் சாட்டியிருந்தார். இந்த மனு இன்று தலைமை நீதிபதி எம்.எம். ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது.
மனுதாரர் தரப்பு வாதங்களை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், "வக்பு வாரிய சட்டப்படி சட்டத்துறை உறுப்பினர் மற்றும் முஸ்லிம் அல்லாத இருவர் நியமிக்கப்படவில்லை என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவருகிறது; இதில் முகாந்திரம் உள்ளது" எனக் குறிப்பிட்டனர். இதனைத் தொடர்ந்து, தற்போது நியமிக்கப்பட்டுள்ள உறுப்பினர்கள் வாரியத்தின் சார்பில் எவ்விதப் பணிகளையும் மேற்கொள்ளக் கூடாது என இடைக்காலத் தடை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், இந்த விவகாரம் குறித்துத் தமிழக அரசு விரிவான பதிலளிக்க உத்தரவிட்ட அமர்வு, வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை வரும் 19-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது. இந்தத் தீர்ப்பால் வக்பு வாரியத்தின் அன்றாட நிர்வாகப் பணிகள் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது.
