கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் முட்டிக்கொள்ளும் மோதல்; டெல்லி பறந்த மேற்கு வங்க முதல்வர் - தேர்தல் வியூக நிறுவன சோதனையில் பெரும் பரபரப்பு!
தேர்தல் வியூக நிறுவனமான ‘ஐ-பேக்’ (I-PAC) அலுவலகத்தில் அமலாக்கத்துறை நடத்திய சோதனையின் போது, முதல்வர் மம்தா பானர்ஜி அத்துமீறி நுழைந்து ஆவணங்களை எடுத்துச் சென்றதாகக் கிளம்பியுள்ள புகாரைத் தொடர்ந்து, இந்த விவகாரம் தற்போது உச்சநீதிமன்றத்தை எட்டியுள்ளது.
கொல்கத்தாவில் உள்ள ஐ-பேக் நிறுவனத்தின் இயக்குனர் பிரதீக் ஜெயின் இல்லத்தில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடிச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு நேரில் சென்ற முதல்வர் மம்தா பானர்ஜி, அதிகாரிகளின் பணிக்கு இடையூறு விளைவித்ததாகக் கடுமையான குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இந்தச் சட்டப் போராட்டம் கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் ஒருபுறம் அனல் பறக்க, மறுபுறம் உச்சநீதிமன்றத்தில் மம்தா பானர்ஜி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகக் கேவியட் மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.
ஐ-பேக் நிறுவன சோதனையின் போது, முதல்வர் மம்தா பானர்ஜி மூத்த காவல்துறை அதிகாரிகளுடன் அத்துமீறி உள்ளே நுழைந்து, அங்கிருந்த முக்கிய ஆவணங்கள் மற்றும் எலக்ட்ரானிக் மென்பொருட்களை எடுத்துச் சென்றதாக அமலாக்கத்துறை (ED) கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் பகீர் புகாரைத் தெரிவித்துள்ளது. இந்த விவகாரத்தில் நீதிமன்றம் தலையிடக் கோரி அமலாக்கத்துறை தாக்கல் செய்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. ஆனால், விசாரணையில் ஏற்பட்ட சில சிக்கல்கள் காரணமாக, வழக்கு வரும் 14-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. அதே வேளையில், இந்த வழக்கின் விசாரணையை வேறு நீதிபதிக்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையையும் அமலாக்கத்துறை முன்வைத்துள்ளது.
இந்த விவகாரத்தில் மத்திய அரசு அல்லது அமலாக்கத்துறை உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து தனக்கு எதிராக ஒருதலைப்பட்சமாக உத்தரவு பெறுவதைத் தடுக்க, மம்தா பானர்ஜி இன்று உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனுவைத் தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், "இந்த விவகாரம் தொடர்பாக ஏதேனும் மேல்முறையீட்டு மனுத் தாக்கல் செய்யப்பட்டால், எனது தரப்பு வாதங்களைக் கேட்காமல் நீதிமன்றம் எத்தகைய இடைக்கால உத்தரவையும் பிறப்பிக்கக் கூடாது" என அவர் கேட்டுக்கொண்டுள்ளார். ஐ-பேக் நிறுவனத்திற்கும் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கும் இடையிலான அரசியல் உறவு ஏற்கனவே பல விவாதங்களை ஏற்படுத்தியுள்ள நிலையில், அமலாக்கத்துறையின் இந்தப் புகார் இந்திய அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.
