குடும்பத்துடன் வீதியில் இறங்கிய நரியம்பட்டி கிராம மக்கள்; காவல்துறை பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து 200-க்கும் மேற்பட்டோர் கலைந்து சென்றனர்!
சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள ஜலகண்டாபுரத்தில், அடிப்படைத் தேவையான சாலை வசதி கோரி பொதுமக்கள் நடத்திய அதிரடிப் போராட்டத்தால் இன்று பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஜலகண்டாபுரம் அருகே நரியம்பட்டி செல்லும் வழியில் உள்ள கல்லுகட்டு வளவு பகுதியில் வசிக்கும் சுமார் 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள், தங்கள் பகுதிக்கு 50 ஆண்டுகளாகச் சாலை வசதி செய்து தரப்படவில்லை எனக் குற்றம் சாட்டி இன்று திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். போராட்டத்தின் உச்சகட்டமாகச் சிலர் தீக்குளிக்க முயற்சி செய்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பதற்றத்தை உருவாக்கியது.
ஜலகண்டாபுரம் அரசு மருத்துவமனை அருகே இன்று காலை திரண்ட கல்லுகட்டு வளவு பகுதி மக்கள், தங்கள் குடும்பத்தினருடன் சாலையில் அமர்ந்து ‘தர்ணா’ செய்தனர். “அரை நூற்றாண்டு காலமாகக் கோரிக்கை விடுத்தும் அதிகாரிகள் மெத்தனமாகவே செயல்படுகின்றனர்; இனி பொறுமை காக்க முடியாது” என முழக்கமிட்டனர். இந்த திடீர் மறியல் போராட்டத்தால் ஜலகண்டாபுரம் - நங்கவள்ளி மெயின் ரோட்டில் போக்குவரத்து முற்றிலுமாகப் பாதிக்கப்பட்டது. நீண்ட வரிசையில் வாகனங்கள் அணிவகுத்து நின்றதால் பயணிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஜலகண்டாபுரம் காவல் துறையினர், சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் சமரசப் பேச்சுவார்த்தை நடத்தினர். போராட்டக்காரர்களில் சிலர் மண்ணெண்ணெய் ஊற்றித் தீக்குளிக்க முயன்றபோது, அவர்களைத் தடுத்து நிறுத்திய போலீசார், உரிய அதிகாரிகளிடம் பேசி சாலை வசதி கிடைக்க வழிவகை செய்யப்படும் என உறுதி அளித்தனர். காவல்துறையின் ‘அஷ்யூரன்ஸ்’ கிடைத்ததைத் தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தைக் கைவிட்டுக் கலைந்து சென்றனர். இருப்பினும், அதிகாரிகளின் மெத்தனப்போக்கு தொடர்ந்தால் மீண்டும் போராட்டம் வெடிக்கும் எனப் பொதுமக்கள் எச்சரித்துள்ளனர்.

