பொம்மை முதல்வர் ரீல்ஸ் எடுப்பதில் பிஸியாக இருக்கிறார்! சட்டம் ஒழுங்கு சீர்குலைவு குறித்து எதிர்க்கட்சித் தலைவர் கண்டனம்!
சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்குள் புகுந்து ரவுடி வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிப்பதைக் காட்டுகிறது” என அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி காட்டமாக விமர்சித்துள்ளார்.
தலைநகரின் இதயப்பகுதியில், அதுவும் மகப்பேறு வார்டுக்கு அருகிலேயே ஒரு படுகொலை அரங்கேறியிருப்பது தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவத்தைக் குறிப்பிட்டு அறிக்கை வெளியிட்டுள்ள எடப்பாடி பழனிசாமி, திமுக அரசின் நிர்வாகத் திறமையின்மையையும், காவல்துறையின் மெத்தனப்போக்கையும் கடுமையாகச் சாடியுள்ளார். மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள அரசு மருத்துவமனையிலேயே பாதுகாப்பு இல்லை என்றால், சாதாரண மக்களின் நிலை என்ன என்ற கேள்வியை அவர் முன்வைத்துள்ளார்.
கீழ்ப்பாக்கம் மருத்துவமனை கொலை குறித்து எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், "உயிரைக் காக்க வேண்டிய மருத்துவமனைகள், இந்த விண்டேஜ் கார் ஓட்டும் ‘விளம்பர மாடல்’ ஆட்சியில் உயிரைப் பறிக்கும் களமாகவும், கஞ்சா வளர்க்கும் இடமாகவும் மாறியிருப்பது வேதனைக்குரியது" எனத் தாக்கியுள்ளார். "தமிழகம் அமைதிப்பூங்காவாகத் திகழ்கிறது என முதலமைச்சர் பொய் அறிக்கை வாசித்துக் கொண்டிருக்கும் வேளையில், பேருந்து நிலையங்கள் மற்றும் காவலர் குடியிருப்புகளில் கூடக் கொலைகள் சர்வசாதாரணமாக நடக்கின்றன. ஒரு நிரந்தர டிஜிபியைக் கூட நியமிக்க வக்கற்ற நிலையில் இந்த அரசு உள்ளது" என அவர் குற்றம் சாட்டினார்.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை ‘பொம்மை முதல்வர்’ எனக் குறிப்பிட்ட அவர், "மக்கள் அச்சத்துடனும் துயரத்துடனும் இருக்கும்போது, சிலம்பம் சுற்றுவதையும் ரீல்ஸ் எடுத்துப் பதிவிடுவதையும் விளையாட்டாகச் செய்து வரும் ஒரு முதல்வரைப் பெற்றிருப்பது தமிழக மக்களின் சாபக்கேடு" என்றார். மேலும், "இந்தக் காவல்துறையையும் அரசையும் நம்பி இனி பயனில்லை; பொதுமக்கள் தங்களது பாதுகாப்பைத் தாங்களே உறுதி செய்துகொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இன்னும் மூன்று மாதங்களில் இந்தக் கொடுமைகளுக்கெல்லாம் தேர்தல் மூலம் முடிவு எட்டப்படும்" என அதிரடியாகத் தனது அறிக்கையை நிறைவு செய்துள்ளார். இந்த அறிக்கை தமிழக அரசியல் களத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
