ஏன் தாமதமாக வந்தீர்கள்? 150 போலீசார் பாதுகாப்புடன் லோதி எஸ்டேட்டில் விஜய் தனி விமானத்தில்!
தமிழகத்தையே உலுக்கிய கரூர் கூட்ட நெரிசல் மற்றும் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் இன்று டெல்லியில் உள்ள சிபிஐ (CBI) தலைமை அலுவலகத்தில் நேரில் ஆஜரானார்.
கடந்த ஆண்டு செப்டம்பர் 27-ஆம் தேதி கரூர் வேலுச்சாமிபுரத்தில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கோர விபத்து குறித்து, உச்ச நீதிமன்ற உத்தரவின்படி சிபிஐ அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே கட்சியின் இரண்டாம் கட்டத் தலைவர்கள் மற்றும் அரசு அதிகாரிகளிடம் விசாரணை முடிந்த நிலையில், இன்று காலை 11.30 மணியளவில் லோதி எஸ்டேட் பகுதியில் உள்ள சிபிஐ தலைமையகத்தில் விஜய் ஆஜரானார். இந்த விசாரணையை முன்னிட்டு டெல்லி சிபிஐ அலுவலகத்தைச் சுற்றி வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
சென்னையில் இருந்து இன்று காலை தனி விமானம் மூலம் டெல்லி வந்தடைந்த விஜய், தனது வழக்கறிஞர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகளுடன் சிபிஐ அலுவலகத்திற்குச் சென்றார். அவருடன் ஜெகதீஷ் பழனிசாமி, ஆதவ் அர்ஜுனா, நிர்மல் குமார் உட்பட 9 பேர் வந்திருந்தனர். சிபிஐ அதிகாரி சுனில் குமார் தலைமையிலான குழுவினர் விஜயிடம் விசாரணையைத் தொடங்கினர். குறிப்பாக, கரூர் பிரசாரக் கூட்டத்திற்கு நீங்கள் ஏன் திட்டமிட்ட நேரத்தை விடத் தாமதமாக வந்தீர்கள்? உங்கள் தாமதத்தால் தான் கூட்ட நெரிசல் ஏற்பட்டதா? தாமதம் குறித்துக் காவல்துறைக்கு முறையான தகவல் தெரிவிக்கப்பட்டதா? போன்ற கிடுக்கிப்பிடி கேள்விகளை அதிகாரிகள் முன்வைத்தனர்.
வழக்கமாக 6 அல்லது 7 போலீசார் மட்டுமே பாதுகாப்புப் பணியில் இருக்கும் லோதி எஸ்டேட் பகுதியில், இன்று விஜய் ஆஜரானதை ஒட்டி 150-க்கும் மேற்பட்ட ஆண் மற்றும் பெண் போலீசார் குவிக்கப்பட்டுச் சாலை முழுவதும் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டது. ஏற்கனவே கடந்த மாதம் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோரிடம் 3 நாட்கள் விசாரணை நடத்தப்பட்ட நிலையில், இன்றைய விசாரணைக்குப் பிறகு நாளையும் (ஜனவரி 13) விஜயிடம் சிபிஐ அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்த உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 41 உயிர்கள் பலியான இந்தச் சம்பவத்தில் பாதுகாப்பு குளறுபடிகள் யாரால் ஏற்பட்டது என்பதில் சிபிஐ தனது பிடியை இறுக்கி வருகிறது.
