விஜய் டெல்லி செல்வது சட்ட நடைமுறை; திமுகவின் 5 ஆண்டு சாதனையைச் சொல்லத் தயாரா? - அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் சவால்!
உங்களை நம்பி வாக்களித்த மக்கள் சாக்கடைக் கழிவுநீரில் இறங்கிப் போராடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்; அவர்களுக்குப் பதில் சொல்லத் துப்பில்லாத திமுக அரசு, சம்பந்தமே இல்லாத விஷயங்களை மேடை போட்டுப் பேசுகிறது என நடிகையும் அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளருமான கௌதமி கடுமையாகச் சாடியுள்ளார்.
தமிழ் செய்தி வாசிப்பாளர்கள் சங்கம் சார்பில் சென்னை புனித தாமஸ் மவுண்ட் பகுதியில் நடைபெற்ற ‘குடும்பங்கள் கொண்டாடும் பொங்கல் விழா 2026’ நிகழ்வில் கௌதமி சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார். செய்தி வாசிப்பாளர்கள் குடும்பத்தினருடன் பொங்கல் வைத்து மகிழ்ந்த இந்த விழாவில் கலந்துகொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘ஜனநாயகன்’ பட விவகாரம், விஜய்யின் டெல்லி பயணம் மற்றும் திமுக அரசின் நிர்வாகத் தோல்விகள் குறித்து அனல் பறக்கும் கருத்துக்களை முன்வைத்தார்.
கரூர் விவகாரம் தொடர்பாகத் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் விசாரணைக்காக டெல்லி செல்வது குறித்த கேள்விக்கு, "இது ஒரு சாதாரணச் சட்ட ரீதியான நடைமுறைதான்; அதன் பிறகு என்ன நடக்கும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்" எனப் பதிலளித்தார். தொடர்ந்து ‘ஜனநாயகன்’ படத் தணிக்கைச் சிக்கல் குறித்துப் பேசுகையில், "ஒரு படம் என்பது பலரின் உழைப்பு, முதலீடு மற்றும் கனவு. அது தாமதமாவது வேதனைக்குரியது. திரைத்துறையில் இருக்கும் ஒரு நபராக, படத்தில் பணியாற்றியவர்கள் தைரியத்தை இழக்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். உங்கள் உழைப்பில் நம்பிக்கை இருந்தால் மக்கள் நிச்சயம் வரவேற்பு கொடுப்பார்கள்" என்றார்.
தணிக்கைக் குழுவை ‘பாஜகவின் கைக்கூலி’ என முதல்வர் விமர்சித்தது குறித்துப் பேசிய கௌதமி, "மத்திய அரசின் ஒரு தன்னாட்சி அமைப்பை இவ்வளவு கேவலமாகப் பேசுவது முறையல்ல. அமலாக்கத்துறை, வருமான வரித்துறை போன்ற அமைப்புகளை நான் மதிக்கிறேன்; அவற்றால்தான் நாம் பாதுகாப்பாக இருக்கிறோம்" எனத் தெரிவித்தார். திமுக அரசின் 5 ஆண்டு கால ஆட்சி குறித்துச் சவால் விடுத்த அவர், "மக்களின் வாழ்க்கைத்தரம் உயர்ந்துள்ளதாக ஒரு மேடையிலாவது திமுகவினரால் சொல்ல முடியுமா?. தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாததால் தான் இன்று ஆசிரியர்களும் மக்களும் போராடுகிறார்கள். சொந்த நாட்டு மக்கள் சாக்கடையில் இறங்கிப் போராடும்போது அவர்களுக்குப் பதில் சொல்லாத முதல்வர், டெல்லியில் யார் யாரைச் சந்திக்கிறார்கள் என்று மைக் போட்டுப் பேசுவது வேடிக்கையாக உள்ளது" எனச் சீறினார். எடப்பாடி பழனிசாமி மற்றும் அமித்ஷா சந்திப்பை விமர்சிப்பதை விட்டுவிட்டு, சாதனைகளைப் பேச திமுகவுக்குத் துணிச்சல் இருக்கிறதா எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.
