சென்னைக்கு நாளை கனமழை எச்சரிக்கை! நாகை, தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுத்த வானிலை மையம்!
வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று மாலைக்குள் இலங்கையின் முல்லைத்தீவு அருகே கரையை கடக்கவுள்ளதால், தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் மழையின் தீவிரம் அதிகரித்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று (10-01-2026) மதியம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, தென்மேற்கு வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள இந்தத் தாழ்வு மண்டலம் மணிக்கு 12 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது. இது தற்போது காரைக்காலுக்குத் தென்கிழக்கே 250 கி.மீ. தொலைவிலும், சென்னைக்குத் தெற்கே 450 கி.மீ. தொலைவிலும் மையம் கொண்டுள்ளது. இதன் தாக்கத்தால் தமிழகத்தின் பல மாவட்டங்களில் இன்று முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்பதால், மீட்புப் படைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கையின்படி, இன்று (சனிக்கிழமை) தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மற்றும் புதுக்கோட்டை ஆகிய 5 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் 'ஆரஞ்சு அலர்ட்' விடுக்கப்பட்டுள்ளது. மேலும், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, அரியலூர், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்கள் மற்றும் புதுவையில் கனமழை பெய்யக்கூடும். கடலோரத் தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் அவ்வப்பொழுது மணிக்கு 35 முதல் 45 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த தரைக்காற்று வீசக்கூடும் என்பதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
சென்னையைப் பொறுத்தவரை இன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்; ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஆனால், நாளை (11-01-2026) மழையின் தாக்கம் மேலும் அதிகரிக்கும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. நாளை சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை வெளுத்து வாங்கும். மீனவர்களுக்கான எச்சரிக்கையைப் பொறுத்தவரை, தமிழகக் கடலோரப் பகுதிகள் மற்றும் மன்னார் வளைகுடாவில் சூறாவளிக்காற்று மணிக்கு 65 கி.மீ. வேகம் வரை வீசக்கூடும் என்பதால், வரும் 12-ஆம் தேதி வரை மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் எனத் திட்டவட்டமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
