இந்தியாவிலேயே நம்பர் ஒன் தமிழ்நாடுதான் - மதுரையில் மாணவிகளுக்கு இலவச மிதிவண்டிகளை வழங்கி நிதியமைச்சர் அதிரடிப் பேச்சு!
பெண் கல்விக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அளித்து வரும் அதீத முக்கியத்துவத்தின் காரணமாகவே, தமிழ்நாடு இன்று 11.9% என்ற பிரம்மாண்ட பொருளாதார வளர்ச்சியை எட்டியுள்ளது என்று தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
மதுரை மாநகராட்சி வெள்ளிவீதியார் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவில், மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கி அமைச்சர் பிடிஆர் சிறப்புரையாற்றினார். திராவிட இயக்கத்தின் நூற்றாண்டு கால வரலாற்றையும், தற்காலப் பொருளாதார முன்னேற்றத்தையும் இணைத்து அவர் ஆற்றிய உரை, கல்வியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில் அமைந்திருந்தது. குறிப்பாக, உற்பத்தித் துறையில் பெண்களின் பங்களிப்பு அதிகரித்திருப்பதே மாநிலத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்குக் காரணி என அவர் சுட்டிக்காட்டினார்.
விழாவில் பேசிய அமைச்சர் பிடிஆர், "பெண் கல்வி என்ற முழக்கம் திராவிட இயக்கத்தின் ஆணிவேரான நீதிக்கட்சி காலத்திலேயே தொடங்கிவிட்டது. 1921-ஆம் ஆண்டிலேயே ஆண்களுக்கும் பெண்களுக்கும் சமமான கல்வி வழங்கப்பட வேண்டும் என்ற சட்டம் கொண்டு வரப்பட்டது. அந்த விதைதான் இன்று தமிழ்நாட்டை இந்தியாவிலேயே 'தெளிவான நம்பர் ஒன்' மாநிலமாக மாற்றியுள்ளது" என்றார். மேலும், தமிழ்நாட்டுப் பெண்கள் இன்று உற்பத்தித் துறையில் மிக அதிக அளவில் பங்களிப்பை ஆற்றி வருவதைக் குறிப்பிட்ட அவர், முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பெண் கல்விக்குத் தரும் முக்கியத்துவத்தால் மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சி 11.9 சதவீதத்தைத் தொட்டுள்ளது எனப் புள்ளிவிவரங்களுடன் விளக்கினார்.
ஒரு வளர்ந்த சமுதாயம் என்பது வெறும் எண்களில் மட்டும் இல்லை என்று குறிப்பிட்ட அவர், "மக்களின் தினசரி வாழ்க்கை எந்த அளவிற்குச் சுகாதாரம், தூய்மையான குடிநீர், பாதாளச் சாக்கடை வசதி மற்றும் நல்ல சாலைகளுடன் அமைகிறதோ, அதுவே உண்மையான வளர்ச்சியின் அடையாளம்" எனத் தெரிவித்தார். தமிழக அரசின் இத்தகைய தொலைநோக்குப் பார்வை கொண்ட திட்டங்களால் மாணவர்கள் எதிர்காலத்தில் பெரும் வல்லுநர்களாக உருவெடுப்பார்கள் என அவர் நம்பிக்கை தெரிவித்தார். இந்த விழாவில் மதுரை மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.
