இலங்கை தமிழர்களுக்குப் பாதிப்பைத் தரும் புதிய சட்டம்; பிரதமருக்குக் கடிதம் எழுதியதாகத் தகவல்!
தமிழர்கள் உலகின் எந்த நாட்டில் வாழ்ந்தாலும், அவர்களின் வேர்களையும் அடையாளத்தையும் ஒருபோதும் மறந்துவிடக் கூடாது; உங்களுக்கு ஏதேனும் ஒரு பிரச்சினை என்றால் தமிழ்நாட்டில் ஒரு சகோதரனாக இந்த ஸ்டாலின் எப்போதும் இருப்பேன் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
சென்னை நந்தம்பாக்கத்தில் நடைபெற்று வரும் ‘அயலகத் தமிழர் தின விழா - 2026’ நிகழ்ச்சியில் பங்கேற்று உரையாற்றிய முதலமைச்சர், புலம் பெயர்ந்து வாழும் தமிழர்களுக்கான நலத்திட்டங்கள், மொழி உரிமை மற்றும் இலங்கை தமிழர்களின் தற்போதைய வாழ்வாதாரச் சிக்கல்கள் குறித்துப் பல்வேறு முக்கியக் கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார். தமிழால் இணைந்திருக்கும் உலகளாவிய உறவுகளைக் கொண்டாடும் விதமாக இந்த விழா கலைகட்டியது.
விழாவில் உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "தமிழ்நாடு மட்டுமின்றி உலகம் முழுவதும் தமிழ்மொழி வளர்ச்சிக்கான திட்டங்களை இந்த அரசு வகுத்து வருகிறது. சாதி, மதம் பாராமல் அனைவரையும் ஒன்றாக்கும் வல்லமை தமிழுக்கு மட்டுமே உண்டு. மொழி சிதைந்தால் இனம் சிதையும், இனம் சிதைந்தால் பண்பாடு சிதையும்; எனவே மொழியைப் போற்றிக் காக்க வேண்டும்" என்றார். அயலகத் தமிழர்களுக்காகத் தனியாக நலவாரியம் அமைக்கப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டிய அவர், வெளிநாடுகளில் உயிரிழக்கும் தமிழர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்படும் நிதியுதவிகள் மற்றும் இலங்கை தமிழர்களுக்காகக் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ள 7,049 வீடுகள் குறித்தும் பட்டியலிட்டார்.
குறிப்பாக, "இலங்கையில் கொண்டுவரப்பட உள்ள புதிய சட்டத்தினால் அங்குள்ள தமிழர்கள் கடுமையாகப் பாதிக்கும் சூழல் உருவாகியுள்ளது. எனவே, அந்தச் சட்டத்தைத் திரும்பப் பெற இலங்கை அரசை வலியுறுத்துமாறு இந்தியப் பிரதமருக்குக் கடிதம் எழுதியுள்ளேன்" எனத் தெரிவித்தார். மேலும், கீழடி அகழ்வாராய்ச்சி மூலம் தமிழர்களின் 4,000 ஆண்டுப் பழம்பெருமை உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், அங்குக் கண்டறியப்பட்ட நீர் மேலாண்மை மற்றும் இரும்புப் பயன்பாடு தொடர்பான அரிய பொருட்களை அயலகத் தமிழர்கள் நேரில் வந்து பார்வையிட வேண்டும் எனவும் அழைப்பு விடுத்தார். கல்வி மற்றும் மருத்துவத் துறைகளில் சிறந்து விளங்கும் அயலகத் தமிழர்களுக்கு ‘கணியன் பூங்குன்றனார் விருது’ வழங்கிச் சிறப்பித்த முதலமைச்சர், "உங்கள் கனவுகளைச் சொல்லுங்கள், அவற்றை நிறைவேற்ற இந்த அரசு தயாராக உள்ளது" என உறுதிபடத் தெரிவித்தார்.
