ஆட்சி அதிகாரம் பற்றி ஸ்டாலின் தான் முடிவெடுப்பார் - அமைச்சர் ஐ.பெரியசாமி கருத்துக்குக் காங்கிரஸ் தலைவர் பதிலடி!
சிங்கம் வாயில் தானாகவே மாட்டிக்கொண்ட கதையைப் போல, தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் சிபிஐ (CBI) வலையில் சிக்கியிருக்கிறார் எனத் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்ற சமத்துவப் பொங்கல் விழா மற்றும் பிரியங்கா காந்தியின் பிறந்தநாள் கொண்டாட்டங்களில் பங்கேற்ற செல்வப்பெருந்தகை, பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, விஜய்யின் டெல்லி பயணம், திமுக அமைச்சரின் அதிகாரப் பகிர்வு குறித்த பேச்சு மற்றும் வரவிருக்கும் தேர்தல் வியூகங்கள் எனப் பல்வேறு அரசியல் விவகாரங்கள் குறித்து அதிரடியாகத் தனது கருத்துகளைப் பதிவு செய்தார்.
தமிழகத்தில் ‘ஆட்சி அதிகாரத்தில் பங்கு இல்லை’ என அமைச்சர் ஐ.பெரியசாமி பேசியது குறித்துக் கேட்டபோது, "அது அவருடைய தனிப்பட்ட கருத்து; கூட்டணி மற்றும் அதிகாரப் பகிர்வு குறித்து அந்தத் தலைமையின் முடிவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மட்டுமே எடுப்பார்" எனத் தெளிவுபடுத்தினார். மேலும், த.வெ.க தலைவர் விஜய் சிபிஐ முன் ஆஜரானது குறித்துப் பேசிய அவர், "தமிழக அரசின் விசாரணையில் எந்த மிரட்டலும் இருக்காது. ஆனால், பாஜக தனது கட்டுப்பாட்டில் உள்ள சிபிஐ-யை வைத்து விஜய்யை டெல்லிக்கு அழைத்து மிரட்டுகிறது" எனச் சாடினார்.
தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சி அமையுமா என்ற கேள்விக்கு, "தற்போது நடப்பதும் காங்கிரஸ் கொள்கைகளைக் கொண்ட ஆட்சிதான்" என மழுப்பலாகப் பதிலளித்த அவர், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான ஆயத்தப் பணிகள் குறித்து வரும் ஜனவரி 18-ஆம் தேதி டெல்லியில் ராகுல் காந்தியுடன் ஆலோசனை நடத்த உள்ளதாகத் தெரிவித்தார். பராசக்தி திரைப்படம் மற்றும் அண்ணாமலையின் விமர்சனங்கள் குறித்துப் பேசிய செல்வப்பெருந்தகை, "திரைப்படம் வரலாற்றைப் பேசுகிறது; ஆனால் 2002 வரை தேசியக் கொடியையே ஏற்றாதது பாஜக தான்" எனப் பதிலடி கொடுத்தார். கட்சியின் கட்டுப்பாட்டை மீறிப் பேசி வரும் திருச்சி வேலுச்சாமி மீது தலைமை நடவடிக்கை எடுக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார். ராகுல் காந்தி நாளை கூடலூருக்கு வருகை தருவதையும் அவர் உறுதிப்படுத்தினார்.
