ஈரோட்டில் மாநில மாநாடு; மூன்றாம் பாலினத்தவருக்கும் வாய்ப்பு! மாநிலப் பொதுக்குழுவில் 5 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்!
வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் 5 தொகுதிகளில் போட்டியிட முடிவு செய்துள்ளோம்; எங்களது கோரிக்கைகளை ஏற்கும் கட்சியோடு கூட்டணி அமைத்துத் தேர்தலைச் சந்திப்போம் எனத் தமிழக நீதிக்கட்சியின் நிறுவனத் தலைவர் வாழவந்தி சரவணன் தெரிவித்துள்ளார்.
கரூர் - ஈரோடு ஆத்தூர் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தமிழக நீதிக்கட்சியின் மாநிலச் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. மாநிலத் தலைவர் ஜெகன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், கட்சியின் எதிர்கால அரசியல் நகர்வுகள் மற்றும் தேர்தல் நிலைப்பாடுகள் குறித்து 5 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் பங்கேற்றுச் சிறப்புரையாற்றிய வாழவந்தி சரவணன், பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தபோது கட்சியின் அதிரடித் திட்டங்களை விவரித்தார்.
செய்தியாளர்களிடம் பேசிய வாழவந்தி சரவணன், "தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாகவே மக்கள் தொகை அடிப்படையில் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தி முடிக்க வேண்டும். அதன் விகிதாச்சார அடிப்படையில் அனைத்துச் சாதியினருக்கும் அரசியலில் சம வாய்ப்பு வழங்க மத்திய, மாநில அரசுகள் வழிவகை செய்ய வேண்டும் என்பதே எங்களது முதன்மையான கோரிக்கை" என்றார். மேலும், தேர்தலுக்கு முன்பாக ஈரோடு மாவட்டத்தில் கட்சியின் முதல் அரசியல் எழுச்சி மாநில மாநாட்டைப் பிரம்மாண்டமாக நடத்த உள்ளதாகவும் அவர் அறிவித்தார்.
தேர்தல் வியூகம் குறித்துப் பேசிய அவர், "வரும் சட்டமன்றத் தேர்தலில் 5 தொகுதிகளில் போட்டியிடத் திட்டமிட்டுள்ளோம். இதில் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 2 தொகுதிகள், பொதுத் தொகுதிகளில் தலா ஒரு ஆண், ஒரு பெண் மற்றும் ஒரு மூன்றாம் பாலினத்தவர் எனப் போட்டியிட முடிவு செய்துள்ளோம். சமூக நீதியை நிலைநாட்டும் வகையில் மூன்றாம் பாலினத்தவருக்கும் வாய்ப்பளிக்க உள்ளோம்" எனத் தெரிவித்தார். "இந்த 5 தொகுதிகள் மற்றும் எங்களது கொள்கைகளை எந்தக் கட்சி ஏற்றுக்கொள்கிறதோ, அந்தக் கட்சியுடன் இணைந்து தமிழக நீதிக்கட்சி தேர்தலைச் சந்திக்கும்" என அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார். இந்தக் கூட்டத்தில் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.
.jpg)