11 நாட்கள், நூற்றுக்கணக்கான கிலோமீட்டர்... திருச்சியில் தொடங்கி மதுரையில் சங்கமிக்கும் வைகோவின் அரசியல் சாதனைப் பயணம்!
மறுமலர்ச்சி திமுக பொதுச்செயலாளர் வைகோ மேற்கொண்டு வரும் ‘சமத்துவ நடைபயணம்’ நாளை (ஜனவரி 12) மாலை மதுரை ஒபுளா படித்துறையில் பிரம்மாண்டமான பொதுக்கூட்டத்துடன் நிறைவு பெறுகிறது.
கடந்த ஜனவரி 2-ஆம் தேதி திருச்சியில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்ட இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நடைபயணம், பல்வேறு மாவட்டங்களைக் கடந்து நாளை மதுரை மண்ணில் சங்கமிக்கிறது. 82 வயதிலும் தளராத உறுதியுடன் வைகோ மேற்கொண்ட இந்தப் பயணம், திராவிடக் கொள்கைகளையும் சமூக நீதியையும் மக்களிடம் கொண்டு சேர்க்கும் நோக்கில் அமைந்தது. நாளை மாலை 6 மணி அளவில் நடைபெறும் இந்த நிறைவு விழாவில், அரசியல் மற்றும் கலைத்துறையைச் சேர்ந்த முக்கியப் பிரமுகர்கள் பங்கேற்று வைகோவை வாழ்த்திப் பேச உள்ளனர்.
மதுரையில் நடைபெறும் இந்த எழுச்சிமிகு நிறைவு விழாவிற்கு மதுரை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் புதூர் மு. பூமிநாதன் தலைமை தாங்குகிறார். விழாவில் சிறப்பு விருந்தினர்களாகத் தமிழக அமைச்சர்கள் பி. மூர்த்தி, பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் பங்கேற்று வாழ்த்துரை வழங்குகின்றனர். மேலும், கவிப்பேரரசர் வைரமுத்து, ‘புரட்சித் தமிழர்’ சத்யராஜ், மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் மற்றும் திமுக மாவட்டச் செயலாளர்கள் கோ. தளபதி எம்.எல்.ஏ, மு. மணிமாறன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு வைகோவின் இந்த அசாத்தியமான முயற்சியைப் பாராட்டி உரையாற்ற உள்ளனர்.
மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ எம்.பி, அவைத் தலைவர் ஆடிட்டர் அர்ஜுனராஜ், பொருளாளர் மு. செந்திலதிபன் மற்றும் துணைப் பொதுச்செயலாளர்கள் முன்னிலையில் நடைபெறும் இந்த விழாவின் சிகரமாக, வைகோ அவர்கள் தனது நடைபயண அனுபவங்கள் மற்றும் எதிர்கால அரசியல் வியூகங்கள் குறித்து ‘நிறைவு பேருரை’ ஆற்றுகிறார். 11 நாட்கள் இடைவிடாது மக்கள் மத்தியில் பயணித்த வைகோவின் இந்தப் பேருரையைத் கேட்கத் தமிழகம் முழுவதிலும் இருந்து பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் மதுரையில் குவிந்து வருகின்றனர். விழாவின் இறுதியில் மதுரை மாநகர் மாவட்டச் செயலாளர் எஸ். முனியசாமி நன்றி கூறுகிறார். இந்தப் பயணம் தமிழக அரசியலில் ஒரு புதிய திருப்பத்தை ஏற்படுத்தும் என மதிமுகவினர் உற்சாகத்துடன் தெரிவித்துள்ளனர்.
.jpg)