தமிழ் நம்மை ஒருமைப்படுத்தும்; பிள்ளைகளுக்குத் திராவிடத் தலைவர்களின் தியாகத்தைச் சொல்லித்தருங்கள்! - உலகத் தமிழர்களுக்கு வேண்டுகோள்!
சென்னையின் கலையாக ஒரு காலத்தில் ‘கனா’ இருந்தது; ஆனால் இன்று ராப் (Rap) வடிவில் நாம் அரசியல் பேசுகிறோம். குறிப்பாகப் பாடகர் அறிவின் பாடல்கள் அத்தகைய சமூக மாற்றத்தைப் பேசுகின்றன என திமுக துணைப் பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.
சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில், அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறை சார்பில் ‘அயலகத் தமிழர் தினம் - 2026’ இரண்டு நாள் விழா இன்று தொடங்கியது. காலையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இவ்விழாவைத் தொடங்கி வைத்த நிலையில், இரண்டாம் அமர்வில் நடைபெற்ற ‘தொன்மையும் நாகரிகமும், தமிழர் பண்பாட்டு அடையாளம்’ என்ற தலைப்பிலான கருத்தரங்கில் கனிமொழி எம்.பி. பங்கேற்றுச் சிறப்புரையாற்றினார்.
விழாவில் பல்வேறு நாடுகளிலிருந்து வருகை தந்திருந்த தமிழ்ச் சங்க நிர்வாகிகளுக்கு நினைவுப் பரிசுகளை வழங்கிக் கௌரவித்த கனிமொழி கருணாநிதி, பின்னர் மேடையில் உரையாற்றினார். "உலகத் தமிழர்களின் நீண்ட காலக் கோரிக்கையை ஏற்று இந்த விழாவை முன்னெடுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றிகள். இவ்வளவு தூரம் புலம் பெயர்ந்து சென்றும், அங்குத் தமிழர்களாகவே வாழ்ந்து வருவது மகிழ்ச்சியளிக்கிறது" என்றார். மலேசியாவில் எழுதப்பட்ட புலம்பெயர் தமிழர்களின் வலி மிகுந்த பாடல் வரிகளை நினைவு கூர்ந்த அவர், நாட்டார் கலைகள் மக்களின் வாழ்வியலைத் தன்னுள் அடக்கியவை எனக் குறிப்பிட்டார். "விமானத்தை முதன்முதலில் பார்த்தபோது, 'மாடு இல்லாத வண்டி வானத்தில் பறக்கிறது' எனப் பாடியதுதான் நம் நாட்டார் கலை. சாதி, மதம் கடந்து மக்களின் கனவுகளைப் பதிவு செய்வதுதான் இந்தக் கலைகளின் சிறப்பு" என அவர் விளக்கினார்.
தொடர்ந்து இன்றைய தலைமுறை குறித்துப் பேசிய அவர், "கனா என்பதுதான் ஒரு காலத்தின் சென்னை அடையாளமாக இருந்தது; இன்று ராப் வடிவில் அரசியல் பேசும் அளவிற்கு நம் கலை வளர்ந்துள்ளது. பாடகர் அறிவின் பாடல்கள் அதற்குச் சிறந்த உதாரணம்" என்றார். சமூக வலைதளங்கள் மூலம் குழந்தைகளுக்குத் தவறான கதைகள் திணிக்கப்படுவதை எச்சரித்த அவர், "சாதி, மதம் நம்மைப் பிளவுபடுத்தும்; ஆனால் தமிழ் மொழி நம்மை ஒருமைப்படுத்தும். படிப்பு மறுக்கப்பட்ட காலத்தில் அதற்காகப் போராடிய தியாகங்களை நம் பிள்ளைகளுக்குச் சொல்ல வேண்டும். புராணக் கதைகளைச் சொல்லித்தருவதில் தவறில்லை, ஆனால் மேடை தோறும் சமூக நீதிக் கருத்துகளைச் சொன்ன தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, கலைஞர் மற்றும் ஸ்டாலின் ஆகியோரின் தியாகங்களையும் பிள்ளைகளுக்குக் கற்றுக்கொடுங்கள்" என வேண்டுகோள் விடுத்தார். இறுதியாக, வெளிநாடுகளிலிருந்து வந்துள்ள அனைவரையும் 'சென்னை சங்கமம்' நிகழ்ச்சிக்கு அன்புடன் வரவேற்பதாகக் கூறித் தனது உரையை நிறைவு செய்தார்.
.jpg)