இரட்டை அடுக்கு மேம்பாலத்தில் சீறிப்பாய்ந்த மெட்ரோ; 10 ரயில்களை இயக்க நிர்வாகம் அதிரடித் திட்டம்!
சென்னையின் போக்குவரத்து நெரிசலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், போரூர் - வடபழனி இடையேயான மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் இன்று வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து பிப்ரவரி இரண்டாம் வாரத்தில் இந்த வழித்தடம் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்டத் திட்டத்தின் ஒரு முக்கிய மைல்கல்லாக, பூந்தமல்லி முதல் வடபழனி வரையிலான உயர்மட்ட வழித்தடத்தில் பணிகள் நிறைவடைந்துள்ளன. இன்று காலை நடைபெற்ற 5.5 கி.மீ. நீள சோதனை ஓட்டத்தினைத் தொடர்ந்து, சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறை செயலாளர் கோபால் மற்றும் மெட்ரோ நிர்வாக இயக்குநர் சித்திக் ஆகியோர் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது, பூந்தமல்லி முதல் வடபழனி வரையிலான பயண நேரம் மற்றும் ரயில் நிலையங்களின் செயல்பாடுகள் குறித்த முக்கியத் தகவல்களை அவர்கள் பகிர்ந்து கொண்டனர்.
செய்தியாளர்களிடம் பேசிய மெட்ரோ நிர்வாக இயக்குநர் சித்திக், "இன்று போரூர் முதல் வடபழனி வரையிலான 5.5 கிலோமீட்டர் தூர சோதனை ஓட்டத்தை வெற்றிகரமாக முடித்துள்ளோம். தொடக்கத்தில் போரூர் வரை மட்டுமே ரயிலை இயக்கத் திட்டமிட்டிருந்தோம், ஆனால் மக்களின் வசதிக்காக அதனை வடபழனி வரை நீட்டித்துள்ளோம்" என்றார். இந்த மாத இறுதிக்குள் ரயில்கள் 35 முதல் 40 கி.மீ. வேகத்தில் இயக்கப்பட்டுச் சோதனைகள் நிறைவடையும். "பிப்ரவரி இரண்டாம் வாரத்தில் பூந்தமல்லி முதல் வடபழனி வரை மக்கள் பயன்பாட்டிற்கு ரயில்கள் கொண்டு வரப்படும்; மொத்தம் 10 ரயில்கள் இந்த வழித்தடத்தில் இயக்கப்படும்" என அவர் உறுதிபடத் தெரிவித்தார். பூந்தமல்லி முதல் போரூர் வரை 7 நிமிடங்களுக்கு ஒரு ரயில் இயக்கப்படும் என்றும், ஒட்டுமொத்தமாகப் பூந்தமல்லியில் இருந்து வடபழனியை வெறும் 25 நிமிடங்களில் வந்தடையலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
தொடர்ந்து பேசிய அதிகாரிகள், "தற்போது போரூரில் தொடங்கி வடபழனியில் மட்டுமே ரயில் நிற்கும்; அடுத்த 5 மாதங்களில் இடைப்பட்ட நிலையங்களின் பணிகள் முடிந்ததும் அனைத்து இடங்களிலும் நின்று செல்லும் வகையில் மாற்றப்படும். ஜூன் இறுதிக்குள் கோடம்பாக்கம் வரை ரயில் சேவை நீட்டிக்கப்படும்" என்றனர். மேலும், கோவை மற்றும் மதுரை மெட்ரோ திட்டங்களுக்கான மறுஆய்வு அறிக்கைகள் தமிழக அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் அவை ஒன்றிய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்படும் என்றும் தெரிவித்தனர். சுரங்கப் பாதை பணிகளால் மக்களுக்கு ஏற்படும் இடையூறுகள் அடுத்த 6 முதல் 10 மாதங்களில் முடிவுக்கு வரும் என்றும் அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். வடபழனியில் நிலவும் ஆற்காடு சாலை நெரிசலுக்கு இந்த புதிய மெட்ரோ சேவை ஒரு நிரந்தரத் தீர்வாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
