9 மணி நேரத்திற்கும் மேலாகச் சென்னை விமான நிலையத்தில் பயணிகள் தவிப்பு; ஆத்திரமடைந்த மக்கள் முற்றுகைப் போராட்டம்!
சென்னையில் இருந்து மும்பைக்குப் புறப்படத் தயாரான ஸ்பைஸ்ஜெட் தனியார் பயணிகள் விமானத்தில் கடைசி நிமிடத்தில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறு காரணமாக, 185 பயணிகள் உட்பட 192 பேர் மயிரிழையில் பெரும் அசம்பாவிதத்திலிருந்து உயிர் தப்பியுள்ளனர். இந்தச் 'சென்சிட்டிவ்' தொழில்நுட்பக் கோளாறை விமானி சரியான நேரத்தில் கண்டறிந்ததால், வானில் ஏற்படவிருந்த மிகப் பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது. எனினும், விமானம் பல மணி நேரம் தாமதமானதால் ஆத்திரமடைந்த பயணிகள் சென்னை விமான நிலையத்தில் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இன்று காலை 8:30 மணிக்குச் சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து மும்பை நோக்கிப் புறப்பட ஸ்பைஸ்ஜெட் விமானம் தயாராக இருந்தது. இதில் 185 பயணிகள் மற்றும் 7 ஊழியர்கள் என மொத்தம் 192 பேர் பயணிக்கவிருந்தனர். விமானம் ஓடுபாதையில் (Runway) நகரத் தொடங்குவதற்குச் சில நிமிடங்களுக்கு முன்னதாக, வழக்கமான பாதுகாப்புச் சோதனையில் ஈடுபட்டிருந்த விமானி, என்ஜினில் ஏற்பட்ட கோளாறைத் தற்செயலாகக் கண்டறிந்தார். இந்த நிலையில் விமானத்தை இயக்குவது தற்கொலைக்குச் சமம் என்பதை உணர்ந்த அவர், உடனடியாக விமான நிலையக் கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் அளித்து விமானத்தை அவசரமாக நிறுத்தினார். பயணிகள் அனைவரும் கீழே இறக்கப்பட்டு ஓய்வறைகளில் தங்க வைக்கப்பட்டனர்.
முதலில் காலை 10:30 மணிக்கு விமானம் புறப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், 11 மணி கடந்தும் பழுது சரிசெய்யப்படாததால் பொறுமையிழந்த பயணிகள் ஸ்பைஸ்ஜெட் கவுண்டரைச் சூழ்ந்து கொண்டு முற்றுகையிட்டனர். இதனால் அங்கு 'டென்ஷன்' நிலவியதை அடுத்து, பாதுகாப்பு அதிகாரிகள் தலையிட்டுப் பயணிகளைச் சமாதானப்படுத்தினர். இறுதி அறிவிப்பாக, மாலை 5:30 மணிக்குத்தான் விமானம் புறப்படும் என்றும், பயணிகள் அனைவருக்கும் உணவு உள்ளிட்ட வசதிகள் செய்யப்படும் என்றும் ஏர்லைன்ஸ் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 9 மணி நேரத்திற்கும் மேலாக விமான நிலையத்தில் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டதால் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகினர். இருப்பினும், விமானம் வானில் பறப்பதற்கு முன்னரே 'டெக்னிக்கல் பால்ட்' கண்டுபிடிக்கப்பட்டதால் 192 உயிர்கள் காக்கப்பட்டதை எண்ணிப் பலரும் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.
.jpg)