புது தில்லி: நாட்டின் தலைநகரான டெல்லியில், தனது கணவர் கொல்லப்பட்ட வழக்கில் முக்கிய சாட்சியாக இருந்த பெண் ஒருவர் பட்டப்பகலில் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சட்டத்தின் முன் குற்றவாளிகளை நிறுத்தப் போராடிய ஒரு பெண், அதே குற்றவாளிகளால் குறிவைத்துத் தூக்கப்பட்டிருப்பது டெல்லி போலீசாருக்குப் பெரும் சவாலாக மாறியுள்ளது.
டெல்லி ஷாலிமார் பாக் பகுதியைச் சேர்ந்தவர் ரச்சனா யாதவ் (44). இவர் அப்பகுதியின் குடியிருப்பு நலச் சங்கத் தலைவராகப் பணியாற்றி வந்தார். நேற்று (ஜனவரி 10) காலை ரச்சனா யாதவ் வெளியே சென்று கொண்டிருந்தபோது, மர்ம நபர்களால் வழிமறிக்கப்பட்டு துப்பாக்கியால் சுடப்பட்டார். இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார்.
கடந்த 2023-ம் ஆண்டு ரச்சனா யாதவின் கணவர் மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டார். அந்த வழக்கில் ரச்சனா யாதவ் மிக முக்கியமான சாட்சியாக இருந்து வந்தார். நீதிமன்றத்தில் அவர் அளிக்கவிருந்த சாட்சியம், குற்றவாளிகளுக்குக் கடுமையான தண்டனையைப் பெற்றுத் தரும் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்தச் சூழலில், அவர் சாட்சி சொல்வதைத் தடுப்பதற்காகவும், வழக்கிலிருந்து தப்பிப்பதற்காகவும் கொலைக் குற்றவாளிகளே இவரைத் தீர்த்துக்கட்டியிருக்கலாம் எனப் போலீசார் பலத்த சந்தேகம் கொண்டுள்ளனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், ரச்சனா யாதவின் உடலை மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தப்பியோடிய கொலையாளிகளைப் பிடிக்க அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளைப் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
