வருமான வரித்துறை ஃபைலுக்குப் பயந்து சீட் கொடுத்துவிடுவார்! - அதிமுக ஊழல் குறித்து ஸ்டாலின் அன்று சொன்னது உண்மை எனப் பேச்சு!
தமிழகத்தில் திமுக மிகவும் வலுவாக உள்ளதால், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியால் ஒரு எதிர்க்கட்சித் தலைவராகக் கூடச் சரியாகச் செயல்பட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது என அதிமுக ஒருங்கிணைப்புக் குழுவின் நிர்வாகி வா. புகழேந்தி கடுமையாக விமர்சித்துள்ளார்.
கோவை மாவட்டத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த புகழேந்தி, அதிமுகவின் தற்போதைய அரசியல் நிலைப்பாடு, பாஜகவுடனான கூட்டணி ரகசியங்கள் மற்றும் ஜெயலலிதா மரணம் தொடர்பான மர்மங்கள் குறித்துப் பல்வேறு அதிரடித் தகவல்களைப் பகிர்ந்து கொண்டார். குறிப்பாக, எடப்பாடி பழனிசாமி மத்திய அரசின் விசாரணை அமைப்புகளுக்குப் பயந்தே அரசியல் செய்து வருவதாக அவர் குற்றம் சாட்டினார்.
செய்தியாளர்களிடம் பேசிய வா. புகழேந்தி, "எடப்பாடி பழனிசாமி தற்போது முழுமையாகப் பாஜகவின் கட்டுப்பாட்டில் இருக்கிறார். வருமான வரித்துறை ஃபைல்களைக் காட்டி மிரட்டினால், பாஜக கேட்கும் அத்தனை இடங்களையும் அவர் கொடுத்துவிடுவார் என்றே தோன்றுகிறது. சரியான நேரத்தில் சரியான முடிவை எடுக்கத் தெரியாத ஒரு தலைமை அதிமுகவில் உள்ளது" என்றார். மேலும் ஜெயலலிதா குறித்துப் பேசுகையில், "யாரோ ஒரு பெண் வந்து ஜெயலலிதா தான் எனது அம்மா எனப் பேசுகிறார்; அம்மா உயிரோடு இருந்திருந்தால் இப்படிப் பேச முடியுமா? அவர் இருந்திருந்தால் பாஜகவினர் இப்படித் துள்ளிக் குதித்துக் கொண்டிருக்க மாட்டார்கள். அவர் இல்லாததால் தான் அனைத்தும் தலைகீழாக மாறிவிட்டது" என வேதனை தெரிவித்தார்.
திமுகவின் செயல்பாடுகளைப் புகழ்ந்து பேசிய அவர், "அதிமுக ஆட்சிக் காலத்தில் உள்ளாட்சித் தேர்தலையே நடத்தவில்லை; ஸ்டாலின் அவர்கள் வந்துதான் அதனை நடத்திக் காட்டினார். அதிமுகவினர் ஊழல் குற்றச்சாட்டுகளில் ஊறிப் போயிருக்கிறார்கள். அன்று எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஸ்டாலின் அவர்கள், ஆளுநரிடம் அதிமுகவின் ஊழல் குறித்து மனு அளித்ததை நாம் மறந்துவிடக் கூடாது" எனக் குறிப்பிட்டார். பொள்ளாச்சி ஜெயராமன் மகன் விவகாரம் குறித்துப் பேசிய புகழேந்தி, "பெருமாநல்லூரில் பெண் ஒருவர் கார் விபத்தில் பலியான சம்பவத்தை, அன்று துணைச் சபாநாயகராக இருந்த பொள்ளாச்சி ஜெயராமன் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி மாற்றினார்; ஆனால் அது கொலை என்று அன்று குரல் கொடுத்தவர் ஸ்டாலின் தான்" என்றார். இறுதியில், "ஜெயலலிதா இறப்பில் உள்ள சந்தேகங்களை வெளிக்கொண்டு வருவோம் என்று முதல்வர் கூறினாரே, அது என்ன ஆனது?" என்ற கேள்வியையும் அவர் முன்வைத்தார்.
