500 கோடி ரூபாய் முதலீடு.. தணிக்கை குழுவின் ஒற்றை உறுப்பினரால் முட்டுக்கட்டை? உயர் நீதிமன்றத்தின் முடிவை எதிர்நோக்கும் படக்குழு!
தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜன நாயகன்’ திரைப்படத்திற்குத் தணிக்கைச் சான்றிதழ் வழங்கக் கோரிய வழக்கில், சென்னை உயர் நீதிமன்றம் நாளை (ஜனவரி 9) காலை 10:30 மணிக்குத் தனது தீர்ப்பை வழங்க உள்ளதாக அறிவித்துள்ளது. பொங்கல் பண்டிகையை ஒட்டி ஜனவரி 9-ஆம் தேதி படம் திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தணிக்கை வாரியம் (Censor Board) சான்றிதழ் வழங்கத் தாமதம் செய்ததால் இப்படத்தின் வெளியீடு தற்போது தள்ளாடிக் கொண்டிருக்கிறது. படத் தயாரிப்பு நிறுவனமான கே.வி.என் புரொடக்ஷன்ஸ் (KVN Productions) தொடர்ந்த இந்த வழக்கில், நாளை வெளியாகவிருக்கும் தீர்ப்பு படத்தின் தலைவிதியைத் தீர்மானிக்கப் போகிறது.
நீதிபதி பி.டி. ஆஷா முன்னிலையில் நடைபெற்று வந்த இந்த விசாரணையில், இரு தரப்பிற்கும் இடையே கடும் வாதப் பிரதிவாதங்கள் அரங்கேறின. தணிக்கை வாரியம் தரப்பில், “படத்தில் உள்ள சில காட்சிகளுக்குத் தணிக்கை குழு உறுப்பினர் ஒருவர் ஆட்சேபம் தெரிவித்துப் புகார் அளித்துள்ளார். விதிகளின்படி, புகார் இருக்கும் பட்சத்தில் ஒரு திரைப்படத்தை மறு தணிக்கை செய்ய எங்களுக்கு முழு அதிகாரம் உள்ளது. சான்றிதழ் வழங்கும் முன்பே தயாரிப்பு நிறுவனம் நீதிமன்றத்தை அணுகியுள்ளது” என்று விளக்கம் அளிக்கப்பட்டது. இந்த 'டெக்னிக்கல்' காரணத்தால் தான் சென்சார் சான்றிதழ் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அவர்கள் வாதிட்டனர்.
இதற்குப் பதிலடி கொடுத்த தயாரிப்பு நிறுவனம், “சுமார் 500 கோடி ரூபாய் பிரம்மாண்ட முதலீட்டில் இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளது. தணிக்கை குழுவின் பெரும்பான்மையான உறுப்பினர்கள் ஒரு முடிவை எட்டிய நிலையில், ஒரே ஒரு உறுப்பினரின் தனிப்பட்ட புகாருக்காகச் சான்றிதழை நிறுத்தி வைப்பது சட்டப்படி ஏற்க முடியாதது. குறித்த தேதியில் படம் வெளியாகாவிட்டால் தயாரிப்பு தரப்பிற்கு ஈடு செய்ய முடியாத மிகப்பெரிய நிதி இழப்பு ஏற்படும்” எனத் தங்கள் தரப்பு நியாயத்தை முன்வைத்தனர். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, தீர்ப்பைத் தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்திருந்த நிலையில், தற்போது நாளை காலை தீர்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாகவே படத்தின் வெளியீட்டைத் தள்ளி வைப்பதாகத் தயாரிப்பு நிறுவனம் நேற்று அறிவித்திருந்தது. நாளை நீதிமன்றம் சாதகமான தீர்ப்பு வழங்கினால், ‘ஜன நாயகன்’ விரைவில் திரையரங்குகளை அதிர வைக்கும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
