97 லட்சம் பேர் நீக்கம்; தகுதியுடைய ஒரு வாக்கு கூட விடுபடக் கூடாது எனப் பாட்டாளி மக்கள் கட்சி அறிக்கை!
தமிழகத்தில் வெளியிடப்பட்டுள்ள வரைவு வாக்காளர் பட்டியலில் வரலாறு காணாத வகையில் லட்சக்கணக்கான பெயர்கள் நீக்கப்பட்டுள்ள நிலையில், தகுதியுள்ள புதிய வாக்காளர்களைச் சேர்க்கும் பணியில் பாட்டாளி மக்கள் கட்சியினர் தங்களை முழுமையாக அர்ப்பணித்துக் கொள்ள வேண்டும் என அக்கட்சியின் தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார். 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு வாக்காளர் பட்டியலைத் தூய்மைப்படுத்தும் அதே வேளையில், தகுதியானவர்களின் உரிமையைப் பாதுகாப்பதும் அவசியம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழகம் முழுவதும் சுமார் 97 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். இடமாற்றம் அல்லது உரிய ஆவணங்களைத் தாக்கல் செய்ய இயலாத காரணங்களால் தகுதியுடைய பலரது பெயர்களும் இதில் விடுபட்டிருக்க வாய்ப்புள்ளது. அத்தகைய நபர்களை அடையாளம் காண்பது பா.ம.க. நிர்வாகிகளின் கடமையாகும். புதிய வாக்காளர்கள் மற்றும் விடுபட்டவர்களைச் சேர்க்க படிவம் எண் 6-ஐயும், விவரங்களைத் திருத்தப் படிவம் 8-ஐயும் பயன்படுத்துங்கள். குறிப்பாக, சென்னை உள்ளிட்ட பகுதிகளில் நேற்று தொடங்கிய இப்பணிகள் ஜனவரி 18-ஆம் தேதி வரை நடைபெறுகின்றன. இன்றும், நாளையும் நடத்தப்படும் சிறப்பு முகாம்களைப் பயன்படுத்தி, வீடு வீடாகச் சென்று பொதுமக்களுக்கு உதவ வேண்டும்" என்று உத்தரவு போட்டுள்ளார்.
"ஜனநாயகத்தில் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள மிகப்பெரிய அங்கீகாரமே வாக்குரிமை தான். எந்தக் காரணத்திற்காகவும் ஒரு வாக்காளர் கூடத் தனது உரிமையை இழந்துவிடக் கூடாது. எனவே, இன்று முதல் அடுத்த ஒரு மாத காலத்திற்குப் பாட்டாளி மக்கள் கட்சியினர் 'தேனீக்களாக' உழைக்க வேண்டும்" என்று அன்புமணி ராமதாஸ் தொண்டர்களை உற்சாகப்படுத்தியுள்ளார். அனைத்து மாவட்ட மற்றும் கிளைக் கழக நிர்வாகிகள் இந்த வாக்குச் சேகரிப்புப் பணியை ஒரு இயக்கமாக முன்னெடுக்க வேண்டும் என்றும் அவர் தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.
.jpg)