மின் கட்டணம் செலுத்துதல், ஆன்லைன் விண்ணப்பங்கள் தற்காலிகமாகப் பாதிப்பு; போர்க்கால அடிப்படையில் சீரமைப்புப் பணிகள் தீவிரம்!
சென்னை அண்ணா சாலையில் உள்ள பிஎஸ்என்எல் (BSNL) தொலைபேசி பரிமாற்றகத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து காரணமாக, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் (TANGEDCO) முக்கிய சேவைகள் முற்றிலுமாக முடங்கியுள்ளன. இதனால் தமிழகம் முழுவதும் உள்ள மின்நுகர்வோர்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
அண்ணா சாலை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் ஏற்பட்ட தீ விபத்தால் தொலைத்தொடர்பு இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன. இதன் நேரடி விளைவாக, மின்சார வாரியத்தின் 24 மணி நேரப் புகார் சேவை மையமான ‘மின்னகம்’ தற்காலிகமாகச் செயல்படவில்லை. மேலும், தொழில்நுட்பக் காரணங்களால் மின்சார வாரியத்தின் ஆன்லைன் விண்ணப்பச் சேவைகள், இணையதளம் வாயிலாக மின் கட்டணம் செலுத்துதல் மற்றும் கவுண்டர்களில் கட்டணம் செலுத்தும் வசதிகள் என அனைத்தும் தற்போது பாதிக்கப்பட்டுள்ளன.
இது குறித்து மின்சார வாரிய அதிகாரிகள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "தொலைத்தொடர்புப் பிரச்சினைகள் காரணமாகச் சேவைகள் முடங்கியுள்ளன. சீரமைப்புப் பணிகள் மிகத் தீவிரமாக, முன்னுரிமை அடிப்படையில் நடைபெற்று வருகின்றன. விரைவில் இப்பிரச்சினை சரிசெய்யப்பட்டுச் சேவைகள் மீண்டும் தொடங்கும். நுகர்வோருக்கு ஏற்பட்டுள்ள இந்தத் தற்காலிக அசௌகரியத்திற்கு வருந்துகிறோம்," என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் சேவைகள் முடங்கியுள்ளதால், இன்று மின் கட்டணம் செலுத்த வேண்டிய இறுதி நாள் உள்ள நுகர்வோர்களுக்குக் கால அவகாசம் வழங்கப்படுமா என்பது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
.jpg)